— அழகு குணசீலன் —
“நாட்டுக்கு புதிய அரசியல் அமைப்பு தேவை. அந்த அரசியல் அமைப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளடக்கப்பட்டு, சர்வஜன வாக்கெடுப்புக்கு விடப்படும்……. புதிய அரசியல் அமைப்பில் பதின்மூன்றாவது திருத்தம் மட்டும் அல்ல பழைய அரசியல் அமைப்பில் செய்யப்பட்டுள்ள இருபத்தியிரண்டு திருத்தங்களும் இல்லாமல் போகும்….” . இது வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவின் தர்க்க ரீதியான குழப்பங்களை தவிர்த்த கருத்து.
அண்மையில் ஜே.வி.பி. செயலாளர் ரில்வின் சில்வாவினால் கூறப்பட்டு, பின்னர் மறுக்கப்பட்ட/திருத்தப்பட்ட தெளிவற்ற கருத்தை சொல்லாடல் அரசியலுக்குள் சிக்காமல் தர்க்கரீதியாக மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார் பிரதி அமைச்சர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் என்.பி.பி. அரசாங்கத்தில் கிழக்கு மாகாணத்தின் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, பிரதி அமைச்சராக, திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக அருண் ஹேமச்சந்திர அதிக முக்கியத்துவத்தையும், மக்களின் கவனஈர்ப்பையும் பெற்ற ஒருவராக உள்ளார். அருண் ஜே.வி.பி./என்.பி.பி. யின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் என்ற வகையிலும் ஆளும் கட்சியின் முக்கிய புள்ளியும், கட்சிதலைமைத்துவத்தில் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒருவருமாகும்.
திருகோணமலை மாவட்டத்தில் என்.பி.பி.யில் அதிகூடிய 38,368 விருப்புவக்குகளை பெற்றவர். இரண்டாவது நிலையில் வந்த ரொஷான் அக்மீமன 25, 814 விருப்புவாக்குளையே பெற்றிருந்தார். இதற்கு மூன்று சமூகங்களும் அருணுக்கு விருப்பு வாக்குகளை அளித்ததே காரணம்.
இந்த அடிப்படையிலேயே ஜனாதிபதியினால் சர்வதேச உறவுகளைக்கொண்ட வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். பூகோள அரசியல், பொருளாதார கேந்திர முக்கியத்துவம் கொண்டதும், பிராந்திய, சர்வதேச வல்லரசுகளின் கழுகுப்பார்வைக்கு உட்பட்டதுமான திருகோணமலையின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கு பங்களிப்பு செய்து கணிசமான அந்நியச் செலாவணியை இலங்கைக்கு பெற்றுத்தரும் ஒரு மாகாணம் என்ற அடிப்படையிலும் ஜனாதிபதியின் இந்த தேர்வு மிகவும் பொருத்தமானது என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. வெளியுறவு அமைச்சராகவிருந்த லக்ஷ்மன் கதிர்காமருக்கு பின்னர் வெளியுறவுத்துறைக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒரு தமிழர் இவர்.
அதேவேளை அவரது கட்சியின் கொள்கைக்கு ஏற்ப அவர் பற்றிய தகவல் விபரத்தில், தேசியம்: “இலங்கையர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மறுபக்கத்தில் சர்வதேச, உள்நாட்டு ஊடகப்பதிவுகள் இதற்கு முரணாக அவரை “இலங்கை”அரசியல்வாதி என்று அடையாளம் காண்பதற்கு பதிலாக “தமிழ்”அரசியல்வாதி என்று அடையாளப்படுத்துகின்ற போக்கே முதன்மை பெறுகிறது என்பதையும் இங்கு குறிபிட்டே ஆகவேண்டும். இந்த இரண்டு அடையாளங்களையும் சமத்துவமாக, சமாந்தரமாக,சமகாலத்தில் பேணுவதே பன்மைத்துவ சமூக கட்டமைப்பின் அடிப்படை சமூக, ஜனநாயக, அரசியல் உரிமையாக இருக்கமுடியும். இல்லையேல் கடந்த காலங்கள் போன்று அரசாங்க ஆதரவு தமிழ், முஸ்லீம் அரசியல்வாதிகளை” சிங்களவர்களாக” பார்க்கின்ற இனவாத நோக்கே மேலோங்குமேயன்றி அரசாங்கம் எதிர்பார்க்கின்ற “இனவாதம்” அற்ற இலங்கை சமூகங்களை உருவாக்குவதற்கான நம்பிக்கையை அது வழங்காது.
அருண் ஹேமச்சந்திரவின் முக்கிய அரசியல் நியமனங்களின் பின்னணியில் ஜனாதிபதிக்கும், அவரது கட்சிக்கும் “கிழக்கு” குறித்து சில இலக்குகள் இல்லாமல் இவை ஒன்றும் இடம்பெறவில்லை.
1. ஒப்பீட்டளவில் சிங்கள மக்கள் மத்தியில் பலமாகவும், தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் பலவீனமாகவும் உள்ள என்.பி.பி./ஜே.வி.பி.யை கிழக்கில் கட்டி எழுப்புதல்.
2. மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் இடம்பெற்ற “அநாகரீக சண்டை அரசியலை” முடிவுக்கு கொண்டு வருதல்.
3. அருண் ஹேமச்சந்திராவை கிழக்குமாகாண முதலமைச்சர் வேட்பாளராக தயார் படுத்துதலில் அதற்கான சமூக, பொருளாதார, அரசியல் சூழலை ஏற்படுத்துதல்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்.பி.பி. கிழக்கு மாகாணத்திற்கான 16 நாடாளுமன்ற உறுப்பினர்களில் (திருகோணமலை:4, மட்டக்களப்பு:5, அம்பாறை:7) 7 உறுப்பினர்களை ( முறையே 2+1+4) பெற்றுள்ளது. அடுத்த இரண்டாவது நிலையில் தமிழரசுக்கட்சி (முறையே (1+3+1) 5 உறுப்பினர்களை பெற்றுள்ள சூழலில் மற்றைய கட்சிகள் 4 உறுப்பினர்களை பெற்றுள்ளன. இந்த 7:5:4 என்ற நிலையானது இன்றைய நிலையில் என்.பி.பி.க்கு திருப்பி அளிப்பதாக இல்லை. குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட தேர்தல் முடிவில் என்.பி.பி. திருப்தி அடையவில்லை.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் 7:9 என்ற அடிப்படையில் வாக்குகளை பார்த்தால் கிழக்குமாகாண சபையை என்.பி.பி. கைப்பற்றுவது உறுதியாக இல்லை. இதை சீர்செய்வதற்கான பணி பிரதியமைச்சர் அருணுக்கு வழங்கப்பட்டிருப்பதாக கொழும்பு ஜே.வி.பி. வட்டாரங்களிலிருந்து கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த காய் நகர்வின் ஒரு பகுதியே அம்பாறையில் தேசிய பட்டியலில் முஸ்லீம் பிரதிநிதி ஒருவரை உள்வாங்கி இருப்பது .
வடக்கு, கிழக்கில் கிழக்கு மாகாணசபையை கைப்பற்றும் இலக்கையும், வடக்கில் எதிர்க்கட்சி நிலையை எட்டும் இலக்கையும் அரசாங்கம் கொண்டுள்ளது. இதன் மூலம் அரசியல் அமைப்பு திருத்தம், இனப்பிரச்சினைக்கான தீர்வு என்று வரும் போது இந்த “இலங்கையர்” அங்கீகாரம் சர்வஜன வாக்கெடுப்புக்கு அப்பால் வடக்கு கிழக்கின் இரண்டாவது – துணை அங்கீகாரமாக காட்டப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும். அத்துடன் பாரம்பரிய தாயகக்கோட்பாட்டை அது நொண்டியாக்கும்.
கிழக்கு மாகாணத்தில் என்.பி.பி. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் சுமார் மூன்று இலட்சத்திற்கும் சற்று குறைவான வாக்குகளையே பெற்றுள்ளது. தமிழரசுக்கட்சி ஏறக்குறைய 1,67,000 வாக்குகளை பெற்றுள்ளது. எனினும் மற்றைய பிரதான எதிர்க்கட்சிகள் பெற்ற மிகுதி வாக்குகளோடு ஒப்பிடுகையில் என்.பி.பி.யின் வாக்குகள் குறைவானவை. இதனால் கிழக்கில் இந்த கட்சிப்பணி அவசியமாகிறது. கிழக்கில் சிங்கள,தமிழ், முஸ்லீம் மக்களின் வாக்குபெறுகையை அதிகரித்தால் வடக்கு, கிழக்கு துண்டாடலின் அரசியல் பயனை ஜே.வி.பி. அனுபவிக்க கூடியதாக இருக்கும். எனினும் இது இனப்பிரச்சினை தீர்வினால், தமிழ் முஸ்லீம் மக்களின் அரசியல் அபிலாஷைகளினால் நிர்ணயிக்கப்படுகின்ற ஒரு
விடயமாக அமையப் போகிறது என்பதால் “இலங்கையர்” கோஷத்தோடு இந்த இலக்கை அருண் ஹேமச்சந்திர ஊடாக அடைவது அவ்வளவு இலகுவானதல்ல. அதே வேளை இவரைத் தவிர மூவினமக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தலைமைத்துவம் என்.பி.பி.க்கு கிழக்கில் இல்லை. “கிழக்கு மாகாண சபைக்கு சிங்கள முதலமைச்சரா?” என்று கேட்கின்ற சாணக்கியனுக்கு அருண் மூலம் பதிலளித்து இருக்கிறார் அநுர.
இந்த மாகாணசபை குறி பார்த்து சுடும் அரசியலில் என்.பி.பி.மட்டும் அல்ல முஸ்லீம் காங்கிரஸும் இறங்கியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு தேசியப்பட்டியல் நியமனம் ஏறாவூர் நளீம் ஹாயியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மூலம் காத்தான்குடி, ஏறாவூர், ஓட்டமாவடி ஊர்ச்சண்டை பிளவுகளுக்கு ஒட்டுப் போட்டுள்ளார் ஹக்கீம். மட்டக்களப்பு மாவட்டத்தில் சிதறும் முஸ்லீம் வாக்குகளை மாகாணசபை அதிகாரத்தை நோக்கி இணைப்பதற்கான மற்றொரு முயற்சி இது. இந்த தந்திரோபாய நகர்வுகள் எதுவும் இன்றி தமிழரசுக்கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்தில் மற்றொரு பிளவு ஏற்படுவதற்கான வாய்ப்பே அதிகமாக காணப்படுகிறது. “பிரிந்தவர் கூடினால் கேட்கவும் வேண்டுமா ?” என்று பொசிட்டிவாக கேட்பதற்கு இங்கு எதுவும் இல்லை.
யாழ்ப்பாண முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் மாகாணசபைகள் தொடர்பான தனிநபர் பிரேரணையை, சாணக்கியன் எம்.பி. தொடரப்போவதாகவும் அதனூடாக மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கான அழுத்தத்தை அரசாங்கத்திற்கு கொடுக்கப் போவதாகவும் விளம்பரப்படுத்தப்படுகிறது. 159 உறுப்பினர்களை கொண்ட அரசாங்கத்தரப்புக்கு இந்த அழுத்தம் எப்படி அமையும் என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் வெளிச்சம். சஜீத், ஹக்கீம் அணிகளை நம்பி அதில் தொங்குகிறது தமிழரசுக்கட்சி. கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரமும் இதில் தன்பங்கை செலுத்த தவறப்போவதில்லை.
கடந்த ஆட்சிக்காலத்தில் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டங்கள் தொடர்பான செய்திகள் ஊடகங்களில் அதிக இடத்தை பிடித்திருந்தன. கூட்டங்களை கௌரவமான அரசியல், அதிகாரிகள் கூட்டமாக விடயதானம் சார்ந்து ஒழுங்காக நடாத்த முடியாத நிலையே இருந்தது. அபிவிருத்திக்குழுக் கூட்டங்களை நடாத்தி முடித்தல் என்பதைவிடவும் குழப்பி முடித்தல் என்பது ஒருதரப்பு அரசியல் இலக்காக இருந்தது.
தற்போது அடையாள அரசியல் பேசும் கட்சிகளான தமிழரசுக்கட்சி மூன்று உறுப்பினர்களையும், முஸ்லீம் காங்கிரஸ் இரண்டு உறுப்பினர்களையும் (தேசிய பட்டியல் ஒருவர்) கொண்டுள்ள நிலையில், அரசியல் அனுபவமேயற்ற, பலவீனமான என்.பி.பி. உறுப்பினர் ஒருவருடன் அரசாங்க தரப்பு செயற்படுவது கருத்து முரண்பாடான சந்தர்ப்பங்களில் மிகவும் கஷ்டமானதாக இருக்கும். இதற்கு பலம் சேர்க்கும் வகையிலேயே பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர கொழும்பு தேசிய அரசியலில் அவருக்குள்ள வேலைப்பளுவுக்கு மத்தியிலும் திருகோணமலக்கு மட்டும் அல்ல மட்டக்களப்புக்கும் ஒருங்கிணைப்பு குழுவுக்கு தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைப்பு குழுகூட்ட கேள்விகள் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டால் அதற்கு பதிலளிக்கின்ற பந்தும் நேரடியாக அவரிடமே இருக்கிறது.
மட்டக்களப்பு ஒருங்கிணைப்பு கூட்டங்களில் ஆரம்பத்தில் கட்சி அரசியலில் ஜனா சாணக்கியனோடு ஒத்துழைத்தார். வியாழேந்திரன் பிள்ளையானோடு ஒத்துழைத்தார். பின்னர் இந்த ஒத்துழைப்பு இரு தரப்பிலும் நீடிக்கவில்லை. அப்போது குழப்பும் வேகம் குறைந்து காணப்பட்டது. கச்சேரிக்கு வெளியே வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முன்னாள் மட்டக்களப்பு மேயரும், அன்றைய முன்னாள் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் சாணக்கியனின் முதுகை பலப்படுத்தினர்.
இப்போது அவர்களில் ஒருவரான சிறிநேசன் எம்.பி.யாகியுள்ளபோதும் தமிழரசுக்கட்சியின் சுமந்திரன், சிறிதரன் அணி அரசியல் இவர்களுக்கு இடையே குறுக்கே நிற்கிறது. ஜனாதிபதியுடனான சந்திப்பு கேள்விகளும், பதில்களும் பாஸ்ட்பேப்பர் மீட்டல் வகுப்பாக ஊடகங்களில் திருப்பி திருப்பி அரைக்கப்படுவதற்கு இதுவே காரணம்.முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஒத்துழைப்பை தமிழரசுக்கட்சி பெறமுடியாத சூழலில் அருண் ஹேமச்சந்திராவுக்கு கூட்டங்களை கொண்டு நடாத்துவதற்கான சூழலை இது இலகு படுத்துகிறது.
கிழக்கு மாகாண சபை அதிகாத்தை கைப்பற்றுதல் மூன்று சமூகங்களினதும் அரசியல் எதிர்காலத்தை -திசையை நிர்ணயிப்பதில் மிகவும் முக்கியமானது. தேசிய ஜனாதிபதி, நாடாளுமன்ற தேர்தலில் இருந்து பிராந்திய அடிப்படையிலும், அதிகாரப்பகிர்விலும் இது வேறுபட்டது என்பதால் பிராந்திய கட்சிகள் இதில் அதிக ஆர்வம் காட்டுவது வழமைக்கு மாறானது அல்ல. எனினும் தேசியக்கட்சி ஒன்று தென்னிலங்கைக்கு வெளியே பிராந்திய மட்டத்தில் தன்னைத் தக்க வைத்துக்கொள்வதற்கும் இது அவசியமாகிறது. அதுவும் அநுர அலை நாடாளுமன்ற தேர்தலில் ஏற்படுத்திய தாக்கத்தை தொடர திசைகளை கடந்த என்.பி.பி.க்கு இது இன்னும் முக்கியமானது.