(கேள்வி, பதில் வடிவில்)
— வி. சிவலிங்கம் —
கேள்வி:
தமிழ் அரசியலில் தமிழ் தேசியம் குறித்து அதிகம் வற்புறுத்துகிறதே! இதன் அடிப்படை என்ன?
பதில்:
இத் தேசியம் என்ற சொற் பிரயோகம் மட்டுமே இவர்களது அரசியலில் உள்ளது. தேசியம் என்பதன் உட் பொருள் எப்போதோ நீங்கிவிட்டது. உதாரணமாக, தமிழ் அரசியலில் தமிழ் பேசும் மக்கள் என்ற வார்த்தைப் பிரயோகம் தமிழ் மொழியை பேசு மொழியாகக் கொண்டிருக்கும் சகல மக்களையும் ஒரு கூட்டுக்குள் ஏற்றுக் கொள்கிறது. ஆனால் இவ் வார்த்தைப் பிரயோகம் தற்போது வழக்கொழிந்த வார்த்தையாக மாறிவிட்டது.
இதற்குப் பிரதான காரணம் தமிழரசுக் கட்சிக்குள் ஏற்பட்ட தீவிரவாத மற்றும் சாதி ஆதிக்க சக்திகளின் ஊடுருவல்களும், முஸ்லீம் எதிர்ப்பு நிலைகளின் விளைவுகளாலும் அக் கட்சி முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் ஆதரவையும் இழந்தது. அது மட்டுமல்ல, முஸ்லீம் மற்றும் மலையக மக்களின் நலன்கள் வடக்கு, கிழக்கில் தமிழ் தேசியம் பேசும் சக்திகளின் நலன்களோடு முரண்பட்டுச் சென்றமையால் அவர்களும் இக்குறும் தேசியவாத அரசியலோடு இணைந்து பயணிக்க முடியவில்லை.
இன்று அடிக்கடி உச்சரிக்கப்படும் தமிழ் தேசியம் என்பது அரசு சாரா தமிழ் கட்சிகளைத் தம்மிலிருந்து வேறுபடுத்தப் பயன்படுத்தப்படுகிறதே தவிர வேறு நோக்கங்கள் அதற்கில்லை. இத் தேசியவாதம் பிரிவினை, சாதீய வாதம் மற்றும் சைவமத அடையாளங்களைப் பேணுதல் என்பவற்றை மறைமுகமாக உள்ளடக்கியுள்ளது. அதன் காரணமாகவே தமிழ் சமூகத்திலுள்ள ஏனைய பிரிவுகளை இவர்களால் இணைத்துச் செல்ல முடியவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியை வட்டுக்கோட்டை தீர்மானத்தின் பின்னர் உருவாக்கிய போதிலும் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களால் இணைந்து பயணிக்க முடியவில்லை. அதே போல அஷ்ரப் அவர்களாலும் தொடர முடியவில்லை.
எனவே இன்றைய தமிழ்த் தேசியவாதம் என்பது வெறும் அரசியல் கூச்சலே தவிர அர்த்தமுள்ளதாக இல்லை.
கேள்வி:
தமிழ் அரசியலின் ஆளுமைக்குள் தற்போது கிழக்கு மாகாணம். முஸ்லீம் மக்கள், மலையக மக்கள் இல்லாத நிலையில் தமிழ்தேசியம் என்பது வெறும் வரட்டு வாதமா?
பதில்:
நிச்சயமாக இது வெறும் வரட்டு வாதமே. உதாரணமாக சிங்கள அரசியலில் சிங்கள பௌத்த பெருந்தேசியவாதம் பலம் பொருந்திய நிலையிலுள்ளது. அது அரசியல் ஆதிக்கத்தையும் செலுத்துகிறது. இந் நிலையில் தமிழ் தேசியவாதம் தனக்குள் உள்ள சகல சமூகப் பிரிவினரையும் ஒன்றிணைக்கும் அரசியலை நோக்கி தனது கோட்பாடுகளை வகுக்க வேண்டும். அவ்வாறான போக்கு இன்று இல்லை. சிங்கள பௌத்த பேரினவாதம் ஆதிக்கம் செலுத்துகையில் தமிழ்த் தேசியவாதம் தவிர்க்க முடியாமல் வளர்வதற்கு நிலமைகள் உள்ளன. ஆனால் இத் தேசியவாதம் தனக்குள் முரண்பாடுகளைக் கூர்மைப்படுத்திச் செல்லுமாயின் அது தன்னைத் தானே அழிக்கும் நிலையை நோக்கிச் செல்கிறது. அதுவே இன்றைய தமிழ்க் குறும் தேசியவாதத்தின் போக்காக உள்ளது.
கேள்வி:
சிங்கள பௌத்த பெருந் தேசியவாதம் நாட்டின் இதர தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை மறுதலித்துச் செல்லும்போது ஒவ்வொரு தேசிய சிறுபான்மை இனங்களும் தத்தமது பாதுகாப்பை நோக்கிச் செல்வது தவிர்க்க முடியாதது தானே?
பதில்:
ஒடுக்குமுறை அதிகரிக்கும் போது பாதுகாப்பைத் தேடுவது இயல்பு. ஆனால் அப் பாதுகாப்பு என்பது சகலருக்குமான பாதுகாப்பாக அமையாத பட்சத்தில் இனவாதம் பிரித்தாளும் தந்திரத்தைப் பயன்படுத்த ஆரம்பிக்கிறது. இதுவே இன்றைய அரசியல். தமிழ் அரசியல் சிங்கள பௌத்த பெருந் தேசியவாதத்திற்கு எதிரான கூட்டணியை உருவாக்கினால் மட்டுமே பாதுகாப்பு அர்த்தமுள்ள ஒன்றாக அமையும். தமிழ்க் குறும் தேசியவாதத்தினை உச்சரிப்போர் இந்த ஒற்றுமையை ஏற்படுத்த எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளத் தயாராக இல்லை. ஏனெனில் இவர்கள் அதை வைத்து பாராளுமன்றம் செல்ல முயற்சிக்கிறார்களே தவிர தீர்வை நோக்கிய பயணம் அல்ல. தமிழ் அரசியல் தலைமை முதலில் தமிழ் மக்களினதும், இதர தமிழ் பேசும் மக்களினதும் இயல்பான வாழ்வும், வளமும் ஒருமித்த ஐக்கிய இலங்கைக்குள் உள்ளதா? இல்லையா? என்ற அறுதியான முடிவுக்கு செல்ல வேண்டும். மலையக, முஸ்லிம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர்களில் பெரும்பாலோர் இன்று ஏனைய ஏழு மாகாணங்களிலும் பரந்து விரிந்து வாழும் நிலையில் அவர்களின் நலன்களையும் கருத்தில் கொண்டே புதிய வியூகம் அமைதல் வேண்டும்.
கேள்வி:
இப் பதில்கள் யாவும் நீண்டகால தீர்வைப் பற்றிக் கூறுகின்றன. ஆனால் தமிழர்களினதும், ஏனைய தேசிய சிறுபான்மை இனங்களினதும் இருப்பு. அடையாளம், அரசியல் உரிமைகள், மனித உரிமைகள், வாழ்வுரிமைகள் என பல அடிப்படை அம்சங்கள் தினமும் இல்லாமல் போகிறது. இதனைத் தடுக்காமல் எவ்வாறு நீண்ட கால தீர்வுகளை நோக்கிச் செல்வது?
பதில்:
எமது பலத்தையும், பலவீனத்தையும் சரியாக அடையாளம் கண்டு கொள்ளாமல் வெறும் உணர்ச்சிகளுக்கு அடிமையானால் இவற்றைத் தடுக்க முடியாது. இங்கு ராஜதந்திரம் அவசியமானது. உதாரணமாக தற்போது தேர்தல் நெருங்கியுள்ள சமயத்தில் சிலவற்றை விட்டுக் கொடுக்கவும், சிலவற்றைப் பெற்றுக் கொள்ளவும் எமது அரசியல் தயாராக இருத்தல் வேண்டும்.
நாம் இலங்கை அரசியலை தமிழ் அரசியலுக்கு வெளியில் நின்று அவதானித்தால் நிலமை தெளிவாகப் புரியும். சிங்கள அரசியலும் வெவ்வேறு நலன்களின் கூறுகளாக மாறியுள்ளன. நாடு மிகவும் வங்குறோத்து நிலைக்குச் சென்றுள்ள நிலையில் யாரும் பொறுப்பைச் சுமக்க முன்வர மாட்டார்கள். அவ்வாறு முன்வருபவர்கள் தேசபக்த சக்திகளாக இருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இல்லையேல் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சில தேசவிரோத சக்திகள் அரசைக் கைப்பற்ற முயற்சி செய்யும்.
தமிழ் அரசியல் தலைமைகள் முதலில் சரியான தேசபக்த சக்திகளை அடையாளம் காட்ட வேண்டும். அவர்களை ஆதரிக்க வேண்டும். இது விஷப்பரீட்சையாக அமையலாம். ஆனால் இதுதான் அரசியல் தலைமையின் கடமை. இக்கட்டான நேரத்தில் கட்சி மற்றும் சுயநலன்களுக்கு அப்பால் நாட்டின் பரந்த நலனுக்காக முடிவு செய்வதாகும்.
தமிழ் அரசியல் இன்று தமிழ் மக்களின் நலன்களுக்கு அப்பால் தேசத்தின் பரந்த நலன்களைக் கவனத்தில் கொண்டு யாரை ஆதரிப்பது? என்ற முடிவை நோக்கிச் செல்ல வேண்டும்.
கேள்வி:
அவ்வாறு ஒரு ஜனாதிபதி வேட்பாளரை அடையாளம் காட்டும் நிலமை தமிழ் அரசியலில் இன்று காணப்படுகிறதா?
பதில்:
ஆம். அது நிச்சயமாக காணப்படுகிறது. தேர்தல் மிக நெருங்கும் வேளையில் அவை மிகத் தெளிவாகப் புலப்படும். தற்போதுள்ள தமிழ் அரசியல் தலைமையில் இருப்பவர்களில் சிலர் அதற்கான அனுபவ அறிவைக் கொண்டிருப்பது தற்போது வெளிவரும் வாதப் பிரதிவாதங்களிலிருந்து தெரிகிறது. இங்கு இரண்டு அம்சங்கள் கவனத்திற்குரியவை. முதலாவது மூவர் முன்னணியிலிருப்பதால் கட்சித் தலைவர்களுக்கும் மிக நெருக்கடியான காலமாகும். அவர்களின் முடிவு பிசகினால் நிலமை விபரீதமாக மாறலாம். தமிழ் அரசியல் தலைவர்கள் ஆரம்பத்திலேயே தமது தெரிவை வெளிப்படுத்தினால் சிங்கள பௌத் பேரினவாத சக்திகள் மறைமுக ஒப்பந்தம் இருப்பதாக நிலமைகளை வேறு நிலைக்கு மாற்றலாம் எனவே இறுதி வரை மௌனமாக இருப்பது ஒரு வகை ராஜதந்திரமே. ஏற்கெனவே குறிப்பிட்டது போல தமிழ் அரசியலில் காணப்படும் பிரிவினைவாத அரசியல் என்பது நாட்டின் பொதுவான அரசியல் போக்கோடு இணைத்துப் பார்க்கப்பட வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் மட்டுமல்ல அம் மக்களின் பொருளாதாரத் தேவைகளும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். பிரதேச பொருளாதார வளர்ச்சி, மக்களின் கல்வி, சுகாதாரம், போக்கு வரத்து, சுற்றுச் சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பு போன்ற பல இன்னோரன்ன பிரச்சனைகளையும் கவனத்தில் கொண்டே இந்த முடிவுக்குச் செல்ல வேண்டும்.
கேள்வி:
இன்றைய ஜனாதிபதித் தேர்தலில் 38 அபேட்சகர்கள் போட்டியிடுகின்றனர். இதில் நால்வர் முன்னணியில் உள்ளனர். கடந்த காலங்களில் இருவர் போட்டியிட்டதால் அவர்களின் கடந்த கால அரசியல் வரலாற்றினை மதிப்பீடு செய்து வாக்களித்தார்கள். இம் முறை மூவர் என்பதால் மேலும் குழப்பநிலை காணப்படுகிறது. இச் சிக்கலான நிலையில் ஒரு தமிழ் வாக்காளன் எந்த அடிப்படையில் தனது விருப்பிற்குரிய அபேட்சகரைத் தேர்வு செய்வது?
பதில்:
இந்த நிலை தமிழ் வாக்காளர்களுக்கு மட்டுமல்ல சிங்கள வாக்காளர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. மக்கள் வெளிப்படையாக தமது தெரிவுகளை வெளிப்படுத்தத் தயங்குகின்றனர். தமிழ் வாக்காளனுக்கு அதைவிட பல சிக்கல்கள் உள்ளன. அரசியல் என்பது வரலாறு ஆகும். வாக்கு என்பது ஒவ்வொரு குடிமகனினதும் இறைமை அதிகாரமாகும். இந்த வாய்ப்பு 5 வருடங்களுக்கு ஒரு முறை கிடைக்கிறது. இவ் இறைமை அதிகாரத்தினை ஒருவர் உணர்ச்சிகளுக்கு அடிமையாகி பயன்படுத்த முடியாது. இம் முடிவு பல சந்ததிகளைப் பாதிக்கிறது. எனவே தமிழ் வாக்காளன் இன்று முன்னணியிலுள்ள வேட்பாளர்களின் வரலாற்றினை நன்கு ஆராய்தல் அவசியமானது. உதாரணமாக தற்போது நான்கு வேட்பாளர்களில் சஜீத் பிரேமதாஸ முன்னணியில் இருப்பதாகக் கருதப்படுகிறது. எனவே முதலில் அவரது வரலாற்றினை ஆராயலாம்.
இவரின் அரசியல் ஆரம்பம் ஐ தே கட்சியிலிருந்து ஆரம்பிக்கிறது. இவரது தந்தை ரணசிங்க பிரேமதாஸ ஐ தே கட்சியின் மிக ஆரம்ப உறுப்பினர் நிலமையிலிருந்து மேலே வந்தவர். பொருளாதார அடிப்படையில் மிகப் பின்தங்கிய பிரிவைச் சார்ந்தவர். அவரது தளராத பொதுச் சேவை கட்சியின் உயர் பதவிகளை வழங்கியது. சஜீத் பிரேமதாஸ தனது தந்தையின் காலத்தில் அரசியலுக்கு வரவில்லை. தந்தையின் மறைவின் பின்னர் கட்சிக்குள் உயர் மட்டங்களை அடைவதற்கு மிகவும் போராட்டங்களை நடத்தினார். ரணிலுக்கும், இவருக்குமிடையே உள்முரண்பாடுகள் ஏற்பட்டதாக பத்திரிகைகள் தெரிவித்தன. அவர் பதவிக்கு ஆசைப்படுகிறார் எனவும், காலம் அவருக்கு இன்னமும் இருக்கிறது என்ற செய்திகளும் அவ்வப்போது வெளிவந்தன.
தற்போது வெளிவரும் செய்திகளின் அடிப்படையில் பார்க்கும் போது அவரும், அவரது சக நண்பர்களும் நாட்டில் நிலவிய திறந்த பொருளாதாரத்தின் மோசமான விளைவுகள் குறித்து அங்கு விவாதித்ததாகவும், இப் பொருளாதாரம் காரணமாக தேசிய செல்வம் சுரண்டப்படுவதாகவும், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பதிலாக நாடு நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் தள்ளப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான நிலமையில் தேசிய உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு என்பனவற்றிற்கு வாய்ப்பில்லாமல் போய்விடும் என்ற விவாதங்கள் நிகழ்ந்துள்ளன.
2019ம் பிற்பகுதியில் ஆரம்பித்த கொரொனா நோயின் தாக்கம் உலக நாடுகளின் உற்பத்தி, விநியோகம் போன்றவற்றைப் பாதித்த வேளையில் இறக்குமதிப் பொருளாதாரத்தில் தங்கியிருந்த இலங்கை மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. வளர்ச்சியடைந்த நாடுகள் தத்தமது பொருளாதாரங்களை மூடிய நிலைக்கு எடுத்துச் சென்றன. இந் நிலையில் அதாவது பொருளாதார அடிப்படைகளில் நாடு மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட வேளையில் ரணில் பதவியை இழந்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். மக்கள் துன்பப்பட்ட வேளையில் நாட்டைக் காப்பாற்ற அவர் முன் வரவில்லை. ஜனாதிபதி அதிகார வாய்ப்புக் கிடைத்த வேளையில் நாட்டைக் காப்பாற்றுவதாக ஓடோடிச் சென்று பதவியைப் பெற்றார்.
நாட்டின் பொருளாதாரம், அரசியல் கட்டுமானம் குறிப்பாக நிறைவேற்று அதிகார முறை கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை நீக்கப்பட வேண்டும் என சஜீத் பிரேமதாஸ கட்சிக்குள் போராடினார். இனவாத அரசியலை கோதபய ராஜபக்ஸ 2019ம் ஆண்டு முன்னெடுத்த வேளையில் அதற்கு எதிராக சஜீத் போட்டியிட்டு தமிழ் மக்களின் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார். தற்போது 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வாக்குறுதி அளித்துள்ளார்.
நாம் தற்போது மக்களின் இரண்டாவது தெரிவாக கருதப்படும் தேசிய மக்கள் சக்தி – ஜே வி பி ஆகியவற்றின் தலைவரான அநுர குமார திஸாநாயக்கா என்பவரின் அரசியலைப் பார்க்கும் போது இக் கட்சி பல மாற்றங்களைக் கடந்து வந்துள்ளது. அக் கட்சியின் ஐந்தாவது தலைமுறை தலைவராக அவர் காணப்படுகிறார். நாட்டின் தேசிய இனப் பிரச்சனை தொடர்பாக மிக மோசமான கொள்கைகளைக் கடந்த காலங்களில் கொண்டிருந்த போதிலும் அக் கட்சி அடிப்படையில் பல மாற்றங்களோடு மக்களை அடைந்துள்ளது. உதாரணமாக 2017ம ஆண்டளவில் தேசிய மக்கள் சக்தி என்ற கல்வி அறிஞர்கள், சமூகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களின் அமைப்பு ஜே வி பி யுடன் கூட்டினை ஏற்படுத்தியது. இக் கூட்டின் பின்னர் அக் கட்சியின் அரசியல் அடிப்படைகள் மிக அதிகளவில் மாறின.
நாட்டின் அரசியலை வர்க்க அடிப்படையில் வர்ணித்த அவர்கள் தற்போது வர்க்க அடிப்படையிலான பார்வையை நீக்கி ஏற்கெனவே செயற்பாட்டிலுள்ள நவ தாரளவாத பொருளாதார செயற்பாட்டின் நல்ல அம்சங்களை ஏற்றுக் கொண்டு குறிப்பாக தேசிய பொருளாதார வளர்ச்சியில் அரசின் பங்களிப்பை உறுதி செய்யும் வகையில் கலப்பு பொருளாதாரத்தை குறிப்பாக பொருளாதார அடிப்படையில் நலிந்த பிரிவினரின் பாதுகாப்பு, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் பங்களிப்பு, தேசிய சிறுபான்மை இனங்களின் அடிப்படை உரிமைகள், தொழிற் சங்கங்களின் உரிமைகள் எனப் பல அம்சங்களல் பாரிய மாற்றங்கள் உள்ளன. உலகளவிலும், தேசிய அளவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் தமது அரசியல் பார்வையிலும் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதால் சிங்கள மக்களின் இளைஞர் ஆதரவு அதிகளவில் அவர்களுக்கு காணப்படுகிறது. தமிழ் வாக்காளர் ஒருவர் தேசிய அளவில் நல்லிணக்கத்திற்கும், இனவாத சக்திகளுக்கு எதிராகவும் செயற்படும் ஆற்றல் அவர்களுக்கு உண்டு எனக் கருதினால் அவர்களின் அரசியலை ஆழமாக ஆராய்ந்து வாக்களிக்க முடியும்.
இங்கு ரணில், நமல் ஆகியோரின் அரசியல் என்பது பலரும் அறிந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக ரணிலின் அரசு யாரின் ஆதரவோடு பயணிக்கிறது என்பதனையும், தேசிய செல்வத்தை சுரண்டியவர்கள் எனவும், இனப் படுகொலையை மேற்கொண்டார்கள் என ஐ நா மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டிய நிலையில் ரணில் யாரைப் பாதுகாத்து வருகிறார் என்பதனையும் காணலாம்.
ரணில் தேசிய அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதாக பிரதமர் பதவியைப் பொறுப்பேற்ற போது கூறினார். ‘அறகலய’ போராட்டம் தொடர வேண்டும் என்றார் . ஆனால் ஜனாதிபதி பதவியை எட்டியதும் ராணுவ. பொலீஸ் உதவியுடன் பலரைச் சிறையிலடைத்தார். தேசிய அரசாங்கம் அமைப்பதாக் கூறிய அவர் பாராளுமன்றத்திலுள்ள 134 பொதுஜன பெரமுன ஆதரவாளர்களின் உதவியுடன் ஜனாதிபதியானார். இவரால் எப்படி தேசிய அரசாங்கம் ஒன்றை இனவாதிகளின் பின்னணியில் உருவக்கியிருக்க முடியும்?
இவை தனியாக விளக்கமாக பேச வேண்டிய விடயங்கள். சிலவற்றை அடையாளப்படுத்தியுள்ளேன்.
கேள்வி:
இன்றைய இலங்கை அரசியலின் நிலமைகளைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் தற்போதைய அரசியல் யாப்பு பல வகைகளில் மாற்றத்திற்கான இடையூறாக அமையலாம் என்பது தெரிகிறது. அவ்வாறாயின் புதிய அரசியல் யாப்பிற்கான அவசியம் தற்போது உண்டா?
பதில்:
இக் கேள்வி மிக விரிவான பதிலை வேண்டி நிற்கிறது. இலங்கைக்குப் புதிய மூன்றாவது குடியரசு யாப்பு அவசியம் என்பதே எனது கருத்தாகும். உதாரணமாக பிரான்ஸ் நாடு தற்போது ஐந்தாவது குடியரசு என அழைக்கப்படுகிறது. வரலாற்றினைப் பார்க்கும் போது 1792-1804 காலப் பகுதி முதலாவது குடியரசுக் காலமாகவும், இரண்டாவது குடியரசுக் காலம் என்பது 1848-1852 எனவும், 1870- 1940 மூன்றாவது குடியரசுக் காலம் எனவும், 1946-1958 வரையான காலம் நான்காவது குடியரசுக் காலம் எனவும், ஐந்தாவது குடியரசுக் காலம் என்பது 1958- இற்றை வரையான காலப் பகுதியாகும்.
இங்கு இரண்டாவது குடியரசு 1852 இல் வீழ்ச்சியடைந்த பின்னர் அங்கு மீண்டும் மன்னராட்சி லூயிஸ் பிலிப்பி ( Louis Philippe) உருவானது. அதனால் ஓர் இடைவெளி உண்டு. அதே போலவே 1940 இல் முடிவடைந்த மூன்றாவது குடியரசு ஆட்சி பின்னர் 1946 இல் நான்காவது குடியரசாக மீண்டும் உருவானது. இந்த இடைவெளிக்குக் காரணம் இரண்டாவது உலகப் போராகும்.
பிரான்ஸ் நாட்டில் ஐந்து குடியரசு யாப்புகள் உருவானதற்குக் காரணம் அங்கு எழுந்த அரசியல் நெருக்கடிகளும், மாற்றங்களுமாகும். உதாரணமாக, பிரான்ஸ் நாட்டில் நான்காவது குடியரசு உருவானதற்கான பின்னணியை நோக்கினால் இரண்டாவது உலகப் போரின் பின்னர் 3வது குடியரசு அரசியல் ஸ்திரமற்ற பிரச்சனையில் சிக்கியது. அடிக்கடி அரசுகள் மாறின. அந் நாட்டின் ஆட்சிக்குள்ளிருந்த குடியேற்ற நாடுகளில் பெரும் உள்நாட்டு எழுச்சிகள் தொடங்கின. உதாரணமாக பிரான்ஸின் கட்டுப்பாட்டிலிருந்த வியட்நாம், அல்ஜீரியா போன்ற நாடுகளில் சுதந்திர விடுதலைப் போராட்டங்கள் வெடித்தன.
இதன் காரணமாகவே நான்காவது குடியரசு தோற்றம் பெற்றது. இவ்வாறே ஜேர்மனியிலும் மூன்று குடியரசு யாப்புகள் உருவாகின. இப் பின்னணியில் இலங்கை நிலமைகளை அவதானிக்கும் போது புதிய குடியரசு யாப்பு ஒன்று உருவாகுமானால் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வுகள் ஒரளவு தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
தற்போது நடைமுறையிலுள்ள இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்ட வேளையில்( 1978 )முன்வைக்கப்பட்ட நோக்கங்கள் சிலவற்றை அவதானித்தால் அவற்றைப் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆட்சி முறை என்பது அரசின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும் ஒருவராகவே இருந்தார். அவர் மிக அதிகளவு அதிகாரங்களைக் கொண்டிருந்தார். ஆனால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாதபடி யாப்பு மூலம் தடுக்கப்பட்டிருந்தது. இம் மாற்றத்திற்கான பிரதான காரணமாக நிலையான ஆட்சிக் கட்டுமானம், மாற்றங்களை தடையில்லாமல் மேற்கொள்ளும் அதிகாரம், புதிய பொருளாதாரக் கொள்கைகளை நிறைவேற்றும் நோக்கங்கள் காரணமாக அமைந்தன. குறிப்பாக, பொருளாதாரம் அந்நிய மூலதன ஊடுருவலுக்குத் திறந்து விடப்பட்டதோடு பொருளாதார செயற்பாட்டில் அரசின் தலையீடு தடுக்கப்பட்டது.
அரசியல் யாப்பு என்பது மிக உயர்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டது. அரசாங்கத்தின் சகல சட்டங்களும், செயற்பாடுகளும் அரசியல் யாப்பிற்கு அமைவாகவே செயற்பட வழிவகுத்தது. நீதித்துறை என்பது மிகவும் சுயாதீனமானது என வரையறுக்கப்பட்ட அரசின் செயற்பாடுகள் உச்ச நீதிமன்றத்தின் மூலமே மாற்றியமைக்க முடியும் என வரையறுக்கப்பட்டது.
தேர்தல் முறை விகிதாசார பிரதிநிதித்துவம் என்ற புதிய முறைக்குள் கொண்டு வரப்பட்டது. சிறுபான்மைச் சமூகங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் நோக்கில் இம் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனாலும் இப் புதிய முறை பல சிறிய கட்சிகள் பாராளுமன்றத்தின் தீர்மானங்களை மாற்றி அமைக்கும் வலுவைப் பெறும் அளவிற்கு மாறின. இதனால் கூட்டு அரசாங்கமே சாத்தியமாகும் நிலை ஏற்பட்டது.
ஆனாலும் என்ன காரணங்களுக்காக புதிய அரசியல் யாப்பினை அறிமுகம் செய்தார்களோ அவை எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. அதிகாரக் குவிப்பு என்பது பலமான அரசுத் தலைவரை உருவாக்குவதற்குப் பதிலாக சர்வாதிகாரி ஒருவரை அதாவது ஏற்கெனவே காணப்பட்ட ஜனநாயக விழுமியங்கள் காணாமல் போகும் அளவிற்கு மாற்றங்கள் ஏற்பட்டன. அதிகாரக் குவிப்புக் காரணமாக பின்னாளில் பதவிக்கு வந்த ஜனாதிபதிகள் மேலும் மேலும் அதிகாரங்களைக் குவித்து நாட்டின் ஜனநாயக நிறுவனங்களின் செயற்பாட்டினை முடக்கினார்கள்.
தேசிய சிறுபான்மை இனங்களின் ஜனநாயக உரிமைகள் படிப்படியாக இல்லாதொழிந்தது. அதிகாரக் குவிப்பும், சிங்கள பௌத்த ஆதிக்கமும் தேசிய சிறுபான்மை இனங்களைப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளின. இதன் விளைவாகவே 1983 இல் இனக் கலவரமாகவும், 30 வருட கால சிவில் யுத்தமாகவும் நிலமைகள் மாறின.
எனவே முதலாம் இரண்டாம் குடியரசு யாப்புகள் எதிர்பார்த்த மாற்றத்தைத் தராத நிலையில் குறிப்பாக நாட்டின் பொருளாதாரம் வெளிநாடுகளிடம் கடன் பெற முடியாத நிலைக்கு சென்றுள்ளதாலும் தற்போதைய இரண்டாவது குடியரசு யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டடு 46 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த 46 ஆண்டுகளில் இதுவரை 21 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு திருத்தம் என்ற அடிப்படையில் அடிக்கடி யாப்பில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் பார்க்கையில் எமது தேசம் ஓர் அளவில்லாத அல்லது பொருத்தமில்லாத சட்டையை அணிந்து அடிக்கடி தைத்துக் கொண்டிருக்கிறது. எனவே இந்த 46 ஆண்டுகளின் அனுபவத்தின் அடிப்படையில் நாட்டின் சகல சமூகங்களும் மாறுதலைத் தேடுகின்றன. ஆகவே புதிய மூன்றாவது குடியரசு அரசியல் யாப்பு அவசியம் என்றே கருதுகிறேன்.
தொடரும்…..