“ கிழக்கின் 100 சிறுகதைகள் “
நோக்கு 03
— செங்கதிரோன் —
வ.அ. இராசரத்தினம் (05.06.1925 – 22.02.2001) எழுதிய ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ (வீரகேசரி 1975) பக்கம் 15-40
ஈழத்தின் சிறந்த சிறுகதை எழுத்தாளர் வரிசையில் முன்வைக்கப்பட வேண்டிய ஒருவர் எழுத்துலகில் ‘வ.அ’ என அழைக்கப்பெற்ற அமரர் வஸ்தியாம்பிள்ளை அந்தோனி இராசரத்தினம். ‘ஒரு காவியம் நிறைவுபெறுகிறது’ எனும் இக்கதை ‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ என்ற இத்தொகுப்பு நூலின் இருபத்தைந்து பக்கங்களைப் பிடித்திருக்கிறது. வ.அ.இராசரத்தினம் பற்றிய வேறு கட்டுரைகள்- குறிப்புகள் சிலவற்றில் இக்கதை குறுநாவலென்றே குறிப்பிடப்பட்டுள்ளது. வீரகேசரியில் தொடர்ந்து 1975இல் நாலைந்து வாரங்கள் குறுநாவலாகவே வெளிவந்துமிருந்தது. அதே ஆண்டில் வ.அ.வின் ‘தங்கம்’ வெளியீடாக (அமுதா அச்சகம்) நூலுருப் பெற்றது.
‘ஹைட்ரோ போபியா’ வியாதி வந்து உயிர்நீத்த (02.09.1975 அன்று) தன் அன்பு மனைவி ‘லில்லி’யின் (மேரி லில்லி திரிஷா- அவரும் ஆசிரியப் பணியிலிருந்து அதிபராக உயர்ந்தவர்) பிரிவுத்துயரின் உணர்வு வெளிப்பாட்டை மறைந்த தன் மனைவியுடன் ஊடாடிய- உறவாடிய- வாழ்ந்த நினைவுகளிடை தோய்ந்து மிகுந்த கலாநேர்த்தியோடு வ.அ.அவர்கள் இக்கதை மூலம் இலக்கியமாக்கியிருக்கிறார்-காவியமாக்கியிருக்கிறார். தனது தாம்பத்திய வாழ்வில் தான் நுகர்ந்த இன்ப துன்பங்களையெல்லாம் ஒளிவுமறைவின்றி ஒப்புவித்திருக்கிறார்.
காதல் மனைவியின் பிரிவுத்துயர் தூண்டிவிட்ட அத்தனை நினைவுகளையும்- உணர்வுகளையும் உள்ளத்திலிருந்து எழும் கலப்படமற்ற- களங்கமற்ற புனைவு மொழியில் கொட்டித் தீர்த்திருக்கிறார். இக்கதை மூலம் தனது மனப் பாரத்தை இறக்கிவைக்க எத்தனித்திருக்கிறார்.
கதையில் வரும் பெயர்கள்- பிரதான மற்றும் உபமாந்தர்கள் அனைத்தும் உண்மையானவை. நிகழ்வுகள் அத்தனையும் உண்மையே. கற்பனையென்றொன்று அறவே இல்லாத கதை. கற்பனையே இல்லாத ஒரு கதையை- காவியத்தைச் சாத்தியமாக்கியிருக்கிறார்-சாதனையாக்கியிருக்கிறார் வ.அ. அவர்கள்.
மூத்த மகள் வசந்தி- பெறாமகன் ஆனந்தன்-சிவப்பிரியன் ஐயா- டாக்டர்- அடுத்த வீட்டில கார் வைத்திருக்கும் அம்பலவாணர்- மனைவியின் தம்பிஜீவரத்தினம்- வ.அ. இன் இலக்கிய நண்பரான உதவி வைத்திய அதிகாரி- மனைவியின் சித்தப்பா மகனான ஆயுர்வேத வைத்தியன்- சுவாமியார்-பெரியண்ணா- நாட்டு வைத்தியர் தியாகராசா- மச்சான் ‘நிக்கொலஸ்’ பண்டிதர்- குடும்ப நண்பனும் உறவினருமாகிய கதிர்காமத்தம்பி -லியோ அண்ணா-உறவினரே அல்லாத வங்கி முகாமையாளர்-மனைவியின் அக்கா- மனைவியின் அம்மா- மச்சான் மனோகரன்- மனைவியின் அப்பா- அபூபக்கர் மாஸ்டர்- செல்லையா அண்ணன்- உறவினன் தாசன்-துரைரத்தினசிங்கம்- உதவி ஆசிரியர் கவிஞன் கனகசிங்கம், விபுணசேகரம்- (எழுத்தாளர்கள்) முல்லைமணி, அருள்சுப்பிரமணியம்- பண்டிதர் வைரமுத்து- குமாரதுரை(கிளிவெட்டி) -மனைவியின் மாணவன் கேசவராசாவும் அவன் மனைவியும் -மனைவியின் பாடசாலையில் சக ஆசிரியர் சுன்னாகம் சண்முகம் மாஸ்டர், அவர்மனைவி சங்கானை அக்கா-மூத்த மகன் ரவி- சோதியன்- சேனையூர் வித்தியாலய உயர் வகுப்பு மாணவர்கள் சுகுமார், ரெத்தினசிங்கம்-பக்கத்து வீட்டு றீற்றா- உதவி டிறெக்டர் (கல்வித் திணைக்களம்) எதிரிசூரிய- முருகேசு மாஸ்டர்-எழுத்தாளர்களான எஸ்.பொ. ரகுமான்- உதவி மந்திரி மஜீத்-ஹசன் விதானையார்- தம்பலகாமத்துச் சித்திரவேல், கணேசபிள்ளை -மனைவியின் தம்பி அந்தோணி டொக்டர்- தங்கத்துரையண்ணன் (பா.உ.)- தம்பி ஸ்டணிஸ்லாஸ்- மட்டக்களப்பு இராசேந்திரா- பங்குக் குரு சொய்சா- அரசரெத்தினம் அடிகளார்- காமினி பெர்னான்டோ அடிகளார்- சந்திரா அடிகளார்- ஜோசப்மேரி அடிகளார்- சின்னமகன் நோயெல்- நாகூரில் பங்கு குரு ஹமில்டன் அடிகளார் என்று எல்லாப் பாத்திரங்களுமே உண்மைப் பாத்திரங்களே.
மொகலாய மன்னன் ஷாஜஹான் தனது காதல் மனைவி ‘மும்தாஜ்’ ஜுக்கு எழுப்பிய ‘தாஜ்மஹால்’ கட்டிடம் போன்று வ.அ. அவர்கள் தன் மனைவி லில்லிக்குக் கட்டிய காவியம்தான் இக்கதை. காலத்தால் அழியாதது.
எழுத்தாளர் அமரர் வ.அ.இராசரத்தினம் அவர்களிலோ- அவரது படைப்பாற்றலிலோ- ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ எனும் கதையிலோ எந்த விதமான எதிர்மறை விமர்சனங்களும் எழ நியாயமில்லை. அத்துணை அருமையான- அற்புதமான படைப்பு இது. கதையின் நிறைவிலே வ.அ. செய்யும் பிரகடனம் அவரது உணர்வு வெளிப்பாட்டின் உச்சம். அது இதுதான்.
“…………இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வழங்கும் தமிழ் இலக்கியத்திலே புலவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் சரித்திரம் எழுதப்பட்டிருக்கிறது தவிர அவர்களை உருவாக்கிவிட்ட அவர்களின் மனைவியருக்கு சரித்திரமே கிடையாது. தமிழ் இலக்கியத்துக்கே முற்றிலும் புதுமையான அக்கலைப்படைப்பை நான் படைத்தே தீருவேன்”
வ.அ. அவர்கள் தனது பிரகடனத்தை இக்கதை மூலம் அச்சொட்டாக நிறைவேற்றியிருக்கிறார். ஆனால், ‘கிழக்கின் நூறு சிறுகதைகள்’ எனும் பெரும் தொகுப்பு நூலினைப் பற்றி நான் எழுதும் இத் திறன் நோக்கு (நூல் மதிப்பீடு) பத்தித் தொடரின் ஆரம்பத்திலே- அறிமுகக் குறிப்பிலே நான் குறிப்பிட்ட, எனது இந்தத்திறன் நோக்குப் பார்வையில் ‘கிழக்கின் சிறுகதைகள்’ என்று அடையாளப்படுத்தும் போது கிழக்கைச் சேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளாக மட்டுமல்லாமல் சிறுகதைகள் ஏதோ ஒரு வகையில் கிழக்கைக் களமாகக் கொண்டவையாகவும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளைப் பேசுபொருளாகக் கொண்டவையாகவும்- கிழக்கு மண்ணின் மண் வாசனை வீசுவதாகவும் இருக்க வேண்டுமென்ற அளவுகோலைப் பயன்படுத்தியுள்ளேன்’ என்ற கூற்றினையும்,
கிழக்கு மாகாணத்தைக் கதைக்களமாகக் கொண்டு கிழக்கு மாகாண மக்கள் சமூகத்தின் சமூக பொருளாதார- அரசியல் மற்றும் வாழ்வாதார- வாழ்வியல் பிரச்சினைகளை (சில வேளை அப்பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் கூட)கலைப்பெறுமானத்துடன் வெளிக்கொணர்கின்ற சிறுகதைகளே கிழக்கின் சிறுகதைகளாகும் என்ற எடுகோளினையும்,
‘கிழக்கின் சிறுகதைகள்’ என்ற வார்த்தைப் பிரயோகமும் மகுடமும் கிழக்கு மாகாண எழுத்தாளர்களுடன் இணைந்து அந்த மண்ணையும் மக்களையும்தானே குறிக்க வேண்டுமென்ற பொருத்தப்பாட்டையும் மனம் கொள்ளும் போது வ.அ. அவர்களின் ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ என்னுமிக் கதையைச் சிறந்த கதையாகச் சிலாகிக்கலாமே தவிர, கிழக்கின் சிறுகதை என்றுவகைப்படுத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை. இக்கதை ஐம்பது சிறுகதைகள் கொண்ட வ.அ.இன் ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ (1996) என்ற தொகுப்பு நூலிலும் இடம்பெற்றுள்ளதாக அறியக்கிடக்கிறது.
‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ எனுமிக் கதையை வ.அ. அவர்களே குறுநாவல் என்றுதான் குறிப்பிட்டுள்ளார். வ.அ.இராசரத்தினம் எழுதிய ‘இலக்கிய நினைவுகள்’ (அன்பர் வெளியீடு, திருகோணமலை- 1995 தைமாதம்) என்னும் நூலிலும் இரு இடங்களில் இதனைப் பதிவு செய்துள்ளார்.
* “1975 செப்டம்பரில் என் மனைவியை இழந்தேன். இழந்த நான்காம் நாளிலேயே, என் அளப்பரிய சோகத்தை ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ என்ற குறுநாவலாக எழுதி என் துயருக்கு வடிகால் சமைத்தேன். அக்கதை வீரகேசரியில் தொடர்ந்து பிரசுரமாகிச் சூடாறு முன்னரே நூலுருப் பெற்றது”. (‘இலக்கிய நினைவுகள்’ பக்கம் 60)
* “மனைவி இருந்த வரை நான் ‘அரிசி விலை தெரியாத’ இலக்கியக்காரன். நான் எனக்கென்று உடுதுணிகள் வாங்கி அறிய மாட்டேன். எல்லாமே என் மனைவியின் கைங்கரியங்கள்தான். மனைவி இறந்துபோன பொழுது கண்ணைக் கட்டிக் காட்டில்விடப்பட்ட குழந்தையாகித் தடுமாறிக் கலங்கினேன். அவள் இறந்த நான்காம் நாளே என் மனைவியின் நினைவுகளை ஒரு குறு நாவலாக எழுதி என் சோகத்திற்கு வடிகாலமைத்தேன். ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ என்ற குறுநாவல் வீரகேசரியில் தொடர்ந்து வெளிவந்தது. சரவணையூர் மணிசேகரனின் தாரணி அச்சகம் அந்நூலையும் வெளியிட்டது.” (‘இலக்கிய நினைவுகள்’ பக்கம் 157/158)
வ.அ. அவர்களே குறுநாவல் எனக்கருதிய ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ எனுமிக் கதையை இத்தொகுப்பு நூலின் தொகுப்பாளர் (கள்) ஏன் சிறுகதையாகத் தேர்வு செய்தார்(கள்)? இந்நூலின் தொகுப்புப் பணியில் ஈடுபட்டவர்களிடம் பரந்த வாசிப்புப் பரப்பும், அர்ப்பணிப்புடன் கூடிய இலக்கியக் கரிசனையும் இருந்திருக்கவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.
வ.அ. அவர்கள் முந்நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். அவரின் அறுபத்தைந்து சிறுகதைகள் ‘தோணி’ (15) மற்றும் ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ (50) ஆகிய தொகுப்பு நூல்களில் வெளிவந்துள்ளன. இருபத்தைந்து பக்கங்களைப் பிடித்துள்ள ‘ஒரு காவியம் நிறைவு பெறுகிறது’ எனுமிக் கதையைத் (இது ஒரு தனி நூலாக வெளியிடக் கூடிய தகுதியை உடையது) தவிர்த்து வ.அ. அவர்களின் பக்கங்கள் குறைந்த (ஐந்தாறு பக்கங்களில் அடங்கக்கூடிய) வேறு கதையொன்றினை இத்தொகுப்பில் சேர்த்திருக்கலாம்.
ஈழத்துச் சிறுகதை வரலாற்றில் சிறந்த சிறுகதைகளாகச் சிலாகிக்கப்படுவனவற்றுள் வ.அ. அவர்களின் ‘தோணி’ சிறுகதையும் அடங்கும்.
‘தோணி’ 20.12.1953 ‘ஈழகேசரி’ப் பத்திரிகையில் முதன்முதல் வெளிவந்தது. 1950 இலிருந்து 1957 வரையிலான காலப்பகுதியில் வ.அ. அவர்கள் ‘ஈழகேசரி’யில் இருபத்தியொன்பது சிறுகதைகள் எழுதியுள்ளார். (செங்கையாழியான் கலாநிதி க.குணராசா- ‘ஈழகேசரியும் வ.அ. இராசரத்தினமும்’ கட்டுரை)
‘தோணி’ சிறுகதை, கொழும்பிலிருந்து ‘இளம்பிறை’ ரகுமானின் முதலாவது அரசு வெளியீடாக 1962ஆம் ஆண்டில் வெளிவந்த ‘தோணி’ என்னும் சிறுகதைத் தொகுதியிலும் இடம்பெற்றுள்ளது. மட்டுமல்லாமல் கிழக்கிலங்கையின் மண்ணிற்கு முதன்முதல் இலக்கிய சாகித்திய மண்டலப் பரிசு பெற்றுத் தந்த பெருமையும் ‘தோணி’க்குண்டு. கே.எஸ்.சிவகுமாரன் எழுதிய ‘திறனாய்வுப் பார்வைகள்’ நூலில் ‘தோணி’ சிறுகதை பற்றிய மதிப்பீடும் இடம்பெற்றுள்ளது.
‘தோணி’ சிறுகதை வீரகேசரியில் பிரசுரமான போது இலங்கையர்கோனால் வெகுவாகப் பாராட்டப்பெற்ற கதை. அதன் தரம் கருதி ‘மஞ்சரி’யில் மறுபிரசுரமானது. ‘ஈழத்துச் சிறுகதைகள்’, ‘அக்கரை இலக்கியம்’ ஆகிய சிறுகதைத் தொகுப்பு நூல்களில் இடம் பிடித்தது. ஏ.ஜே.கனகரத்னாவினால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு ‘ஓப்சேவர்’ (OBSERVER) பத்திரிகையில் வெளிவந்தது. ரஷ்ய மொழியிலும் மலையாள மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டது. த.கனகரத்தினம் அவர்கள் சிங்களத்தில் மொழிபெயர்த்துச் சிறுகதைத் தொகுதியொன்றில் சேர்த்தார்.
இந்தப் பின்புலத்தில் ‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ நூலைத் தொகுத்தவர்களால் ‘தோணி’ சிறுகதை ஏன் தவிர்க்கப்பட்டதெனத் தெரியவில்லை. இப்பெரும் தொகுப்பு நூலைத் தொகுத்தவர்களிடம் ‘கிழக்கின் சிறுகதைகள்’ என்பதற்கான தெளிவான அளவுகோலும்- முறையான தேடலும் தொடர்பாடலும் கலந்துரையாடலும்- பக்கச்சார்பற்ற இலக்கியக் கரிசனையும் இருக்கவில்லையென்றே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.
கிழக்கிலங்கையின் சிறுகதைச் சித்தர்களாகச் சிறப்பித்துக் கூறப் படவேண்டியவர்கள் இருவர். ஒருவர் பித்தன் (கே.எம்.ஷா). மற்றவர் வ.அ. அவர்கள். பித்தன் ஷா வின் ‘பாதிக் குழந்தை’யை இத்தொகுப்பு நூலில் சேர்த்துக்கொண்ட தொகுப்பாளர்கள் வ.அ. இன் ‘தோணி’ யை எந்தத் கடலில் தொலைத்தார்கள்?
ஒரு வாதத்திற்காகத் தோணியை விட்டாலும் வ.அ. எழுதிய வேறு பல சிறப்பான கதைகளும் உள்ளன.
* எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் வீரகேசரியில் பணிபுரிந்த காலத்தில் வ.அ. அவர்களின் முயற்சியில் மூதூரில் தமிழ் விழாவொன்று நடந்தது. 1964ஆம் ஆண்டு ஆவணி மாதத்தின் மூன்றாம் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று நாட்கள் நடைபெற்ற இவ் விழாவையொட்டி எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் ஞாயிறன்று விழா மலரொன்றை வெளியிட்டார். இம்மலரில் வ.அ. எழுதிய ‘சுடலை ஞானம்’ என்ற சிறுகதையும் இடம்பெற்றது. இச் சிறுகதையும் சிறந்ததெனச் சிலாகிக்கப்பட்டதொன்றாகும்.
* ‘கனி’ என்ற தலைப்பில் வானொலியில் ஒலிபரப்பப்பட்டுப் பின்னர் ‘வானொலி’ என்ற இதழிலும் பிரசுரமான கதையைத் தன் சிறந்த கதைகளிலொன்றென வ.அ.வே குறிப்பிட்டுள்ளார். (‘இலக்கிய நினைவுகள்’பக்கம் 49)
* வ.அ. அவர்களின் ‘உண்ணி’ எனும் சிறுகதையும் சிறப்பானதாகப் பேசப்பட்டதொன்றாகும். இது எம்.ஐ.எம்.ஜபார் அவர்களை இதழாசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘ஆகவே’ எனும் சிற்றிதழில் (இதழ்-2 -டிசம்பர் 1992) இடம்பெற்றுள்ளது.
* தமிழ் ஒளி- கலாபூஷணம் வ.அ.இராசரத்தினம் அவர்களின் பவள விழாவையொட்டி 2000 ஆம் ஆண்டு சித்தி அமரசிங்கத்தைப் பொறுப்பாசிரியராகக் கொண்டு திருகோணமலை ‘முத்தமிழ் வளர்கலை மன்றம்’ வெளியிட்ட ‘இலக்கியப் பூந்துணர்’ எனும்மலரில் இடம்பெற்றுள்ள ‘பயணம்’ எனும் சிறுகதையும் (பக்கம் 178) சிறப்பானதொன்றாகும். இக்கதை இரசிகமணி கனகசெந்திநாதன் நினைவுச் சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்று 21.02.1999 ‘தினக்குரல்’ பத்திரிகையில் பிரசுரமானது.
‘கிழக்கின் 100 சிறுகதைகள்’ எனும் இந்நூலின் தொகுப்புப் பணியில் ஈடுபட்டவர்களின் தேடலின்போது கண்ணில் படாமல் இக்கதைகள்தானும் எங்கே ஒளிந்து கொண்டன?