— அ. வரதராஜா பெருமாள்— பகுதி – 13
இக்கட்டுரைத் தொடரின் 11 மற்றும் 12வது பகுதிகளில் இலங்கையின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான நிலைமைகளை அவதானித்தோம். இந்தப் பகுதியில் இலங்கை எதிர்நோக்கும் அந்நியச் செலாவணி நெருக்கடி மற்றும் இலங்கையினுடைய நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி தொடர்பான விடயங்களைக் காணலாம். இவை ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருளாதாரத்தோடு தொடர்பான விடயங்களேயாயினும் இவை தனித்துவமானவை. நாட்டின் உற்பத்திகளின் வளர்ச்சி, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் பொருட்களினுடைய விலையேற்றம் அல்லது விலை வீழ்ச்சி, அரசாங்க வருமானம் மற்றும் செலவுகள் போன்ற பல்வேறு விடயங்களுடனும் தொடர்பு பட்டவையாகும்.
அந்நியச் செலாவணி வழியாக இலங்கைக்கு ஏற்பட்ட கெட்ட காலம்
அண்மைய நாட்களில் இலங்கையினுடைய ரூபாயின் உத்தியோகபூர்வமான பெறுமதி அந்நியச் செலாவணி மாற்று விகிதத்தில் அதாவது ஓர் அமெரிக்க டொலருக்கான மாற்று விகிதத்தில் 200 ரூபாவுக்கு சற்று மேலே உயர்ந்ததாகவும் அல்லது சற்று கீழே இறக்கப்பட்டதாகவும் ஓர் ஊசலாட்டத்தில் வைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் வெளிச் சந்தைகளில் இலங்கையின் ரூபாவைக் கொடுத்து ஓர் அமெரிக்க டொலரை வாங்குவது மிகவும் சிரமமான ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கின்றது. அந்நியச் செலாவணி பரிவர்த்தனை தொடர்பாக அரசாங்கம் விதித்துள்ள பல்வேறு நெறிப்படுத்தல்கள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் அந்நியச் செலாவணிகளின் இருப்பு மிகவும் குறைந்த நிலைமையில் உள்ளமை போன்றவையே காரணங்கள். இதனால் வெளிச்சந்தைகளில் ஓர் அமெரிக்க டொலரைப் பெறுவதற்கு 225 ரூபாவுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.
இதேவேளை, ஒருவர் குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் மேலைத் தேச நாடுகளிலிருந்து நாடு திரும்புபவர்கள் தம்மிடமுள்ள ஓர் அமெரிக்க டொலரை வங்கியிடம் கொடுத்து மாற்றுவதற்கு வங்கி 194க்கும் 197க்கும் இடைப்பட்ட ரூபாக்களையே வழங்குகின்றன. இது இக்கட்டுரைப் பகுதியை எழுதிக் கொண்டிருக்கும் நாட்களில் உள்ள நிலைமை. அடுத்த வாரம் என்ன நடக்குமோ யாரறிவார் என்னும் நிலையே இலங்கையில் உள்ளது. கோவிட் 19ஐக் காரணம் காட்டி அந்நியச் செலாவணி தொடர்பாக அரசாங்கம் விதித்த கடுமையான கட்டுப்பாடுகளின் போது அந்நியச் செலாவணிகள் இலங்கையில் கள்ளச் சந்தைகளில் விற்கப்படும் பண்டங்கள் போன்றாகியது. அவ்வேளையில் ஓர் அமெரிக்க டொலருக்கான விலை 300 ரூபா வரை சென்றதாக கூறப்படுகிறது.
ஏற்றுமதி வருமானத்தை விட இறக்குமதிச் செலவு எப்போதும் இலங்கையில் மிகவும் அதிகமாக இருப்பதையும் வரிகள் மூலமாக கிடைக்கும் வருமானத்தை விட அரசாங்கம் மேற்கொள்ளும் செலவுகள் எப்போதும் மிக அதிக அளவில் இருப்பதையும், இந்த இடைவெளிகள் நிரப்பப்படும் விடயத்தை கடந்த காலங்களில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் எவ்வாறு கையாண்டு வந்துள்ளன – எவற்றில் தங்கி அவ்வாறு செயற்பட்டு வந்துள்ளன என்பதையும் ஏற்கனவே இக்கட்டுரையின் பகுதிகளில் பார்த்திருக்கிறோம்.
2019ம் ஆண்டின் ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலோடு உல்லாசத் துறை படுத்ததால் அத்துறையினால் வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரவு நின்று போனது. கோவிட் 19 பற்றியவுடன் மத்திய கிழக்கு மற்றும் வெளிநாடுகளுக்குச் சென்று உழைத்து இலங்கையர்கள் ஊருக்கு அனுப்பிக் கொண்டிருந்த அந்நியச் செலாவணியும் குறைந்து போனது. கோவிட் கட்டுப்பாடுகளால் உற்பத்திகள் வீழ்ச்சியடைந்தன, இதனால் ஏற்றுமதி வருமானம் வீழ்ந்தது. சில பொருட்களின் இறக்குமதிகளைத் தடை செய்து பல பொருட்களின் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்திய போதும் ஏற்றுமதி வருமானத்துக்கும் இறக்குமதிச் செலவுக்குமிடையே நிலவிய இடைவெளியில் குறிப்பிடத்தக்க மாற்றமெதுவும் நிகழவில்லை. மேலும் எற்கனவே வெளிநாடுகளிடமிருந்து வாங்கிக் குவிக்கப்பட்ட கடன்களுக்காக செலுத்த வேண்டிய வட்டியையும் அத்துடன் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலத்தை எட்டிய முன்னைய கடன்களையும் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயங்களும் என ஒட்டு மொத்தமாக சேர்ந்து கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணிகள் கரைவதற்கே வழி வகுத்தன. இதனால் அந்நிய செலாவணி கையிருப்பானது கரணம் தப்பினால் மரணம் என்பது போல் எப்போதும் அரும்பொட்டு நிலையில் நிற்கும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.
ஏற்கனவே நோய் நிலையிலிருந்த பணப் பெறுமதி உள்நாட்டு விலைவாசி ஏற்றத்தாலும் உக்கிரமானது
1977ம் ஆண்டு ‘ஐக்கிய முன்னணி‘ அரசாங்கம் ஓர் அமெரிக்கன் டொலருக்கு 7 ரூபா 50 சதமாக ஜே.ஆரின் ‘தர்ம ராஜ்யத்திடம் ஒப்படைத்தது. ஜே.ஆர். ஆட்சிக்கு வந்து அறிவித்த முதலாவது வரவு செலவுத் திட்டத்திலேயே இலங்கை ரூபாவில் அமெரிக்க டொலரின் பெறுமதியை இரண்டு மடங்காக்கினார். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி 1995ல் அமெரிக்க டொலரின் பெறுமதியை 52 ரூபாவாக்கி சந்திரிகா அம்மையாரிடம் ஒப்படைத்தது. சந்திரிகா அம்மையாரோ அதனை 100 ரூபாவாக்கி மஹிந்த ஐயாவிடம் ஆட்சியைக் கொடுத்தார். அவர் அதனை 140 ரூபாவாக்கி ரணில் மாமாவிடம் 2015ம் ஆண்டு ஜனவரியில் கொடுத்தார். ரணில் மாமாவோ அதனை ஐந்தே ஆண்டுகளில் 40 ரூபா கூட்டி 180 ரூபாவாக 2019 இறுதியில் கோத்தா மாத்தையாவிடம் கொடுக்க. கோத்தா மாத்தையாவோ கோவிட் வந்து இரண்டு வருசமானாலும் நான் அதனை 200 ரூபாவுக்கு மேலே போகவிடவில்லை என்கிறார். ஆனால் அது அவரின் மத்திய வங்கி நிர்ணயித்துள்ள விலையே. ஆனால் வெளிச் சந்தையில் 225 ரூபாவுக்கு மேல் போய்விட்டதை ஏற்கனவே பார்த்துள்ளோம்.
அந்நியச் செலாவணி கையிருப்பு ஆபத்தான எல்லையில் இருப்பதால் இறக்குமதிக்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் அதன் விளைவாக இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியமான பொருட்களின் விலைகளில் உள்நாட்டில் அதிகரித்தன. கோவிட் 19ன் பரவலால் மட்டுமல்ல, அந்நியச் செலாவணிகளின் இருப்பு மிகக் குறைந்திருப்பதனால் மேற்கொள்ளப்பட்ட இறக்குமதிக் கட்டுப்பாடுகளாலும் உள்நாட்டு உற்பத்திகளில் வீழ்ச்சி ஏற்படுகின்றன. இறக்குமதி செய்யப்படும் மூலப் பொருட்கள் மற்றும் இடைநிலைப் பொருட்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் உள்நாட்டு உற்பத்திகளின் அளவு வீழ்ச்சியடைவது இயல்பானதே. ஒரு புறம் அந்நிய செலாவணி இருப்பு பற்றாக்குறையால் பணத்தின் பெறுமதி குறைய, இன்னொரு பக்கம் உள்நாட்டு உற்பத்திகளின் வீழ்ச்சியால் ஏற்படும் பொருட் தட்டுப்பாடுகளும் விலையுயர்வுக்கு காரணமாகி அவையும் பணப் பெறுமதியின் நிலையை மேலதிகமாக வீழ்ச்சிக்கு இட்டுச் செல்கின்றன. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிக்கும் கதைதான்.
உலக அளவில் கோவிட் காரணமாக சர்வதேச சந்தைகளில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. கோவிட் 19ன் ஆரம்ப மாதங்களில் பெற்றோலிய விலைகள் வீழ்ச்சியடைந்த போதிலும் பின்னர் அவை ஏற்றமாகவே உள்ளன. பெற்றோலியப் பண்டங்களின் இறக்குமதி அளவை அரசாங்கம் குறைக்கவில்லை. ஆனால் அதற்கு முன்னைய ஆண்டுகளை விட கூடுதலாக இப்போது அந்நிய செலாவணி செலவிடப்படுகின்றது. இறக்குமதி செய்யப்படும் உணவுப் பண்டங்களின் இறக்குமதியை தடை செய்ததால் மற்றும் கட்டுப்பாடுகள் விதித்ததால் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடுகளும் விலையேற்றங்களும் ஏற்பட்டதால் அரசாங்கம் மக்களின் வெறுப்பை ஏற்கனவே சம்பாதித்துள்ளது. அதனால் அரசாங்கம் இறக்குமதிக் கட்டுப்பாட்டுக் கொள்கையை தொடர்ந்தும் கடைப்பிடிக்க முடியாது திண்டாடுகிறது. அதேவேளை அந்நிய செலாவணி தட்டுப்பாடான நிலையிலும் உலக சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதாலும் இறக்குமதியை தாராளமாக்கினால் அரசாங்கம் மேலும் அந்நியச் செலாவணிக்கு அந்தரப்பட வேண்டிய நிலைமையே அதிகரிக்கும்.
“வட்டிக் கடனும் வளர் நெருப்பும் வெம்பிணியும்
கட்டழித்தல் வேண்டும் – களைந்துறை – விட்டதுண்டோ
சும்மா விடுமோ – தொடர்ந்து முழுதழிக்கும்
அம்மா தடுத்தல் அரிது”
என் நினைவில் இருக்கும் இந்தப் பாடல் நான் பள்ளிக் கூடத்தில் ஆறாம் வகுப்பிலோ அல்லது ஏழாம் வகுப்பிலோ படித்தது. அப்போதைய இலக்கிய மஞ்சரியில் இருந்த பாடல் என நினைக்கிறேன். இதிலுள்ள சொற்றொடரெல்லாம் சரியோ என்று தெரியவில்லை. என் நினைவில் இருப்பதை உறுதிப் படுத்திக் கொள்வதற்காக எனக்குத் தெரிந்த தமிழ் நீதி நூல்களில் தேடினேன், கூகுளிலும் தேடினேன் கிடைக்கவில்லை. இப்போதைக்கு இலங்கையின் பொருளாதாரம் இருக்கும் நிலையைப் படம் பிடிப்பதற்கும் எச்சரிப்பதற்கும் பொருத்தமான பாடலாகத் தெரிவதனால் இங்கு பதிவு செய்கிறேன்.
பொருளாதார வல்லமை கொண்ட நாடுகளில் இலங்கை கடன் வாங்காத நாடு என்று அல்லது சர்வதேச நிறுவனம் ஏதாவது இருக்கிறதா என கிண்டல் பண்ணுகிற அளவுக்கு இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளிடமும் சர்வதேச நிறுவனங்களிடமும் கடன்கள் வாங்கியிருக்கிறது. கடைசியாக வறிய நாடான வங்காள தேசத்திடமும் கையேந்தி விட்டது என்பது இலங்கை அரசினுடைய நிதி நிலைமையின் பரிதாபத்தைக் காட்டுவதாகவே பலரும் கருதுகிறார்கள்.
கொடுத்த முதலையும் வட்டியையும் கேட்டு இலங்கையின் வாசலில் ‘காசைத் தா, இல்லையென்றால் காணியைத் தா’ என்ற மாதிரி நிற்கும் நாடுகளின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் மேலும் மேலும் தொடர்ந்து கூடுதலான கடன்களை வாங்கியே ஆக வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாகி உள்ளது.
• இறக்குமதிக்கும் ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள பற்றாக்குறையை நீக்க கடன் வாங்க வேண்டியுள்ளது.
• அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தில் துண்டு விழும் தொகையை சரிக்கட்டுவதற்கு அந்நிய நாடுகளிடம் ஏற்கனவே அரசாங்கம் வாங்கிய கடன்களும் தலைக்கு மேல் வெள்ளம் போல் ஏறியிருக்கின்றது.
• ஏற்கனவே, (1) அம்பாந்தோட்டைத் துறைமுகத்தோடு சேர்ந்த 15000 ஏக்கர் நிலமும், கொழும்புக் கரையில் கடலை நிரப்பிய நிலத்தில் பாதியையும் சீனா வாங்கி விட்டது. (2) திருகோணமலையில் பல இடங்கள் இந்தியாவுக்கு, (3) கரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவுக்கு, (4) கொழும்புத் துறைமுக தெற்கு முனையம் சீனாவிடம் உள்ளது, மேற்கு முனையம் இந்தியாவிடம் உள்ளது, கிழக்கு முனையம் எதிர்காலத்தில் யப்பானிடம் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை (5) கொழும்பு தொடக்கம் திருகோணமலை வரை இலங்கையைப் பிளந்து நீளமான ஒரு நிலத் தொடரை எழுதித் தரச் சொல்லி அமெரிக்கா ஒரு திட்டத்தை வைத்துக் கொண்டு டொலரையும் ஆட்டிக் காட்டிக் கொண்டு நிற்கிறது, (6) காலி முகத் திடலையொட்டி இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த இடம் ஏற்கனவே சீன மற்றும் இந்தியன் கம்பெனிகளிடம் போய்விட்டது. அடுத்து கொழும்புத் துறைமுகத்தை அடுத்து கடற்கரையில் நீளமாக இலங்கைக் கடற்படையின் தலைமையகம் அமைந்துள்ள இடம் விரைவில் அமெரிக்காவின் கைக்கு போய்விடும் போலுள்ளது. இலங்கையை ‘நல்லவன்னு’ சொல்லும் வரை ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் நாட்டின் பகுதிகளில் எவ்ளவைத்தான் அந்நியர்களுக்கு எழுதிக் கொடுக்கப் போகிறார்களோ யாரறிவார்!!!
• உள்நாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்கும் கடனும் வருடாவருடம் அதிகரித்த வண்ணமேயுள்ளது. அரசாங்கம் நாட்டில் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளையும் நிறுத்தினாலும் கூட கடன் வாங்காமல் அரசாங்கத்தின் வருமானத்தைக் கொண்டு அரசாங்கத்தின் செலவுகளை சமாளிக்க முடியாது என்கின்ற நிலையிலேயே அரசாங்கம் உள்ளது. அரசாங்கம் தான் எதிர்நோக்கும் நிதி நெருக்கடிகளை சமாளிக்க வளைத்து வளைத்து என்ன நடவடிக்கை எடுத்தாலும் அது மேலும் மேலும் அரசாங்கத்துக்கு நெருக்கடிகளை அதிகரிப்பதாகவே உள்ளது
பணத்தை அச்சடிக்க இறைமை உள்ளது – ஆனால் அச்சடித்தால் இறைமையை இழக்க நேரிடுகிறது
2020ம் ஆண்டில் மட்டும் இலங்கை அரசாங்கத்தினால் அச்சடிக்கப்பட்ட பணத் தொகை 65000 கோடி ரூபா. ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று பல பொருளியல் நியுணர்கள் கேட்க அதிகாரத்தில் ஆங்காங்கே இருக்கும் பொருளாதார அதிகாரிகள் – இறைமை கொண்ட அரசின் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துக்கு, பணத்தை எவ்வளவாயினும் அச்சடிப்பதற்கு உரிமையுண்டு – என்கிறார்கள். 2021ம் ஆண்டு இது வரை சுமார் 30000 கோடி ரூபாக்கள் அச்சடித்தாகி விட்டது. 2020ம் ஆண்டு அரசாங்கத்தின் மொத்த வருமானம் 137500 கோடி ரூபாக்கள். மேற்கொண்ட செலவுகளின் தொகை 305000 கோடி ரூபாக்கள். அதன் அதிகரித்த செலவுகளுக்காக அச்சடித்த பணம் 65000 கோடி ரூபாக்கள். அதைவிட மேலதிகமாக உள்நாட்டிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் அரசாங்கம் வாங்கிய கடன் தொகை ரூபா 100000 (ஒரு லட்சம்) கோடிகளுக்கும் மேல்.
நாட்டில் அரசாங்கம், திறைசேரி, மத்திய வங்கி மற்றும் வணிக வங்கிகள் உள்ளன. அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உரிய நிதியை நிர்வகிப்பதே திறைசேரியின் கடமை. அரசாங்கத்தின் சட்டங்களின்படி, திட்டங்களையும் தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்கான பணக் கொடுக்கல் வாங்கல்கள் திறைசேரியினாலேயே மேற்கொள்ளப்படும். மத்திய வங்கிக்கே பணத்தை அச்சடிக்கும் அதிகாரம் உண்டு. அரசாங்கம் மத்திய வங்கியிடமிருந்தோ வணிக வங்கிகளிடமிருந்தோ கடன்களைப் பெற்றுக் கொள்வதற்கான உறுதிப் பத்திரங்களை அரசாங்கத்தின் தீர்மானத்தின்படி திறைசேரியே வழங்கும். மத்திய வங்கியின் இருப்பில் பணம் இல்லாதபோது திறைசேரியின் பத்திரங்களுக்கு கடன் கொடுப்பதற்காக மத்திய வங்கி பணத்தை அச்சடிக்கலாம்.
நாட்டிற்குள்ளே பண்டங்களின் பரிவர்த்தனைகள் சுமுகமாக நடப்பதற்கு எவ்வளவு பணம் நாட்டில் புழக்கத்தில் இருக்க வேண்டும் என தீர்மானிப்பது மத்திய வங்கியின் கடமை – அதன்படி நடைமுறைப்படுவது அதன் அதிகாரம். அந்தத் தேவைகளுக்கு மீறி பணம் புழக்கத்தில் இருந்தால் அது பணவீக்கத்தை உண்டு பண்ணும் – அதாவது விலைவாசிகளை அதிகரிக்கும். எனவே அச்சடிப்பதில் மத்திய வங்கி எச்சரிக்கையோடு செயற்பட வேண்டும். தொடரச்சியான பணவீக்க அதிகரிப்பு நாட்டின் பொருளாதார உறுதிநிலையைப் பாதிக்கும். எனவே இங்கு நாட்டின் பொருளாதார நலனைப் பாதிக்காத வகையிலேயே அரசாங்கத்தின் பணத் தேவை தொடர்பான நிகழ்ச்சி நிரலுக்கு மத்திய வங்கி ஒத்துழைக்க வேண்டும். இங்கு மத்திய வங்கி சுதந்திரமானதொரு நிறுவனம் எனக் கூறப்பட்டாலும் அது மறைமுகமாக அரசாங்கத்தின் பிடியிலேயே இருக்கின்றது.
திறைசேரியின் கடன் உறுதிப் பத்திரங்களில் எவ்வளவுதான் கொடுக்கப்படும் வட்டியை அதிகரித்து திறந்த சந்தையில் விட்டாலும் அதனைப் பெறுவதற்கான கேள்வி மிகக் குறைவாக உள்ள நிலையில் எஞ்சியவற்றை மத்திய வங்கியே வாங்கிக் கொள்கிறது. சுதந்திர இலங்கையில் பண்டங்களின் பரிவர்த்தனைச் சுழற்சிக்குத் தேவையான பண அளவை விட எப்போதுமே பணம் கூடுதலான அளவிலேயே புழக்கத்தில் இருந்து வந்திருக்கின்றது என்பதே பொருளாதார அறிஞர்களின் கணிப்பு. ஆனால் அந்த இடைவெளி கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக மோசமானதாக உள்ளதை சுட்டிக் காட்டி இலங்கையின் பல பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்தையும் மத்திய வங்கியையும் எச்சரிக்கிறார்கள். ஆனால் அரசாங்கம் அதனை காதில் போட்டுக் கொள்வதாக இல்லை. மத்திய வங்கி கையறு நிலையிலே உள்ளதாக கருதப்படுகிறது. மத்திய வங்கி ஆளுநராக இருந்த பேராசிரியர் லஷ்மன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதற்கு உள்ளேயே தம்மை விட்டால் போதுமென மெதுவாக கழட்டிக் கொண்டு வெளிநாடு போய்விட்டாரா அல்லது அன்பாக அவர் கழற்றி விடப்பட்டாரா என்ற கேள்வி அரசியல் பொருளாதார வட்டாரங்களில் தொக்கி நிற்கின்றது.
பாலுக்குக் காவலாக பூனைகள் இருந்தால் காலியான சட்டிகளே கடைசியில் மிஞ்சும்
மாறாக, நாட்டில் ஏற்பட்டிருக்கும் பண வீக்கத்துக்கும் பணம் அச்சடிக்கப்படுவதற்கும் சம்பந்தம் இல்லையென்கிறார் தற்போதைய மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால். அத்துடன் அவர், மத்திய வங்கி அவசியம் எனக் கருதும் பட்சத்தில் சுழற்சியில் மேலதிகமாக உள்ள பணத்தை மீள உள்வாங்கிக் கொள்ளும் என்கிறார். ஆனால் ஆளுநர் கப்ராலின் முதலாவது கருத்து மிக அடிப்படையான பொருளாதாரக் கோட்பாட்டையே மறுப்பதாகவும், மேலும் அந்தளவு பணத்தை மீளப் பெறுவதற்கு மத்திய வங்கியால் முடியாத பொருளாதார சூழ்நிலையே நாட்டில் நிலவுகிறது எனவும் இலங்கையின் ஒரு பொருளாதார பேராசிரியர் தெளிவாக குறிப்பிடுகிறார்.
நாட்டின் சுழற்சியில் உள்ள பண அளவைக் குறைப்பதற்காக மத்திய வங்கி சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். ஆனால் அவை சிறிய அளவிலேயே தாக்கம் செலுத்தக் கூடியவை. பெரிய அளவில் பணத் தொகையை மத்திய வங்கி மீள உள்ளெடுக்க வேண்டுமானால் அது வணிக வங்கிகளுக்கு கடன் கொடுத்த வகையில் தன்னிடமுள்ள உறுதிப்பத்திரங்களைக் கொடுத்து தான் கொடுத்த பணத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். அவை எந்த அளவு மத்திய வங்கியிடம் உள்ளன என்பதைப் பொறுத்தே மீள உள்ளெடுக்கும் தொகையும் அமையும். அதற்கு மேலதிகமாயின், மத்திய வங்கி தன்னிடமுள்ள திறைசேரி உறுதிப் பத்திரங்கள் மற்றும் தான் வெளியிடும் கடன் உறுதிப் பத்திரங்கள் போன்றனவற்றை வங்கிகள் உட்பட வணிகரீதியான நிதி நிறுவனங்களுக்கு விற்பதன் மூலமே மேற்கொள்ள முடியும். அதற்கு அந்த நிறுவனங்களிடம் தமது கடன் கொடுப்பனவு வர்த்தகத்தையும் மீறிய பணத்தொகை திரவ நிலையில் இருக்க வேண்டும். மேலும் வணிகரீதியான நிறுவனங்கள் அவ்வாறு முதலீடு செய்வதன் மூலம் தாம் வழமையாக மேற்கொள்ளும் வர்த்தகத்தை விட அதிக லாபம் கிடைக்கும் என்றாலே அவ்வாறான முதலீட்டை மேற்கொள்வார்கள் என்பது எளிமையானதொரு விடயம். ஆனால் இங்கு திறந்த சந்தையில் அரசாங்கம் திறைசேரிப் பத்திரங்களை சந்தைப்படுத்த முடியாத நிலை நிலவும் போது மத்திய வங்கி மட்டும் பெரும் தொகையில் நாட்டில் புழக்கத்திலுள்ள பணத்தை மீள எவ்வாறு உள்ளெடுத்து விட முடியும் என்பது ஒரு பெரும் கேள்வியாக முன்னிற்கின்றது.
புதிய நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சாவின் கன்னி நிதி அறிக்கையைப் பார்க்கையில் இவ்வருடமும் அரசாங்கத்தின் செலவு அதன் வருமானத்தை விட இரு மடங்குக்கு மேலாக இருக்கப் போகின்றமை தெரிகின்றது. ஏற்கனவே மாறி மாறி ஆண்ட அரசாங்கங்கள் ஒன்றோடொன்று போட்டி போட்டு உள்நாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் கடன் வாங்கிக் குவித்திருக்கின்றன. இந்த அரசாங்கம் முன்னரை விட அதிகமாக உள்நாட்டுக் கடன்களை வாங்கிக் கொண்டிருக்கின்றது, மேலும் வாங்கப் போகின்றது. ஆனாலும் வணிக வங்கிகளும் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களும் மேலும் அதிகமாக எவ்வளவுக்கு அரசாங்கத்துக்கு கடன் கொடுக்க தயார் நிலையில் உள்ளன என்பது கேள்வியாகும். அரசாங்கம் தான் கடன் வாங்கும் எல்லையை 299000 கோடி ரூபாவிலிருந்து 340000 கோடி ரூபாவுக்கு அதிகரிக்கும் தீர்மானித்தை எடுத்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் அறிவித்திருக்கிறார். எனவே மத்திய வங்கியிடம் தொடர்ந்து பணத்தை அச்சிடும்படி அரசாங்கம் நெருக்குதல் கொடுப்பதற்கான வாய்ப்பே அதிகமாக உள்ளது. என்னதான் அரசாங்கம் புதிய புதிய ராஜ தந்திரங்களை வகுத்தாலும் மேலைத் தேச நாடுகளிடமிருந்தோ இந்தியாவிடமிருந்தோ கடன்களோ, கொடைகளோ உடனடியாக வந்து குவிவதற்கு வாய்ப்பில்லை. சீனாவும் இலங்கைக்கான கடன் எல்லையை வரையறுத்துக் கொண்டு விட்டதாகவே தெரிகின்றது.
திறைசேரி செயலாளர் ஆட்டிகல அவர்கள் கடந்த ஜூலையில் மத்திய வங்கி அச்சடித்த 21300 கோடி ரூபாக்களையும் தாங்கள் திறைசேரி பத்திரங்களைக் கொடுத்து மத்திய வங்கியிடமிருந்து கடனாக வாங்கி, பின்னர் அதனைக் கொண்டு மத்திய வங்கியிடமிருந்து 1000 மில்லியன் டொலர்களை வாங்கி அதனை வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்காக கொடுத்து விட்டதாகவும், ஆகவே, அந்த அச்சடித்த பணம் நாட்டு மக்கள் மத்தியில் விடப்படவில்லை: அது மத்திய வங்கியிடமே திருப்பிக் கொடுக்கப்பட்டு விட்டது. ஆனபடியால் அந்தப் பணத்தால் பணவீக்கம் ஏற்பட மாட்டாது என்றார். இது எப்படியிருக்கு! கவுண்டமணி – செந்திலின் வாழைப்பழ பகிடி போல இல்லையா!
இவர்கள் இலங்கையின் பொருளாதாரத்தை முகாபேயின் ஆட்சிக்கால சிம்பாப்வேயின் நிலைக்கோ அல்லது சுகார்ட்டோவின் ஆட்சிக் கால இந்தோனேசியாவின் நிலைக்கோ கொண்டு போகாமல் இருந்தால் இலங்கை மக்கள் புண்ணியம் செய்தவர்கள் ஆவர். குறிப்பிட்ட இரு நாடுகளிலும் ஆட்சிகள் மாற்றப்பட்டு விட்டன. ஆனால் அவை இன்னமும் தமது பொருளாதார புற்று நோயிலிருந்து விடுபட முடியாத நிலையிலேயே உள்ளன.
(கட்டுரைத் தொடர் பகுதி 14ல் தொடருவோம்.)