இந்தியாவின் தொழில்நுட்பத் திறனும் சிங்கப்பூரின் முதலீடும்: செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதிய கூட்டணி உலகை ஆளுமா?

இந்தியாவின் தொழில்நுட்பத் திறனும் சிங்கப்பூரின் முதலீடும்: செயற்கை நுண்ணறிவுத் துறையில் புதிய கூட்டணி உலகை ஆளுமா?

 ~ பிமன் முகர்ஜி / சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் 

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் சீனாவுடன் போட்டியிட்டு, அதிநவீன தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் இந்தியா பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. எனினும், சிங்கப்பூருடன் வளர்ந்து வரும் அதன் கூட்டுறவு, உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுப்பதற்கான மாற்றுப் பாதையை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவின் பரந்த மென்பொருள் தொழில்நுட்பத் திறனாளர்கள், மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தை ஆகியவற்றுடன் சிங்கப்பூரின் முதலீட்டு மூலதனம் மற்றும் வன்பொருள் தொழில்நுட்பச் சூழலை இணைப்பதன் மூலம், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்களை உருவாக்கி உலகச் சந்தைக்கு ஏற்றுமதி செய்யும் புதிய மாதிரியொன்றை இரு நாடுகளும் உருவாக்க முடியும்.

இது செயற்கை நுண்ணறிவுத் துறையில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நாடுகளுக்குப் போட்டியாக அமையக்கூடும்.

கடலடித் தொடர்புக் கட்டமைப்பில் புதிய முயற்சி

இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப ஒத்துழைப்பு வலுப்பெற்று வருவதற்கான ஓர் அடையாளமாக, கடந்த ஜூன் மாதம் இந்தியாவின் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் புதிய திட்டமொன்றை அறிவித்தது.

மும்பை மற்றும் சென்னை ஆகிய இந்தியத் தொழில்நுட்ப மையங்களை சிங்கப்பூருடன் இணைக்கும் கடலடித் தொலைத்தொடர்பு கேபிள் அமைப்பை உருவாக்குவதே அந்தத் திட்டமாகும்.

ஆசியா முழுவதும் உள்ள நிறுவனங்களின் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும்.

டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரி ஜீனியஸ் வோங் இதுகுறித்துக் கூறுகையில்,

“உலகின் மிகவும் பரபரப்பான டிஜிட்டல் தொடர்புப் பாதைகளில் ஒன்றான இந்தப் பிராந்தியத்தில், எமது வாடிக்கையாளர்களுக்கான தொடர்புச் சேவைகளின் நம்பகத்தன்மை, விரிவாக்கத் திறன் மற்றும் செயல்திறனை வலுப்படுத்தி வருகிறோம்” என்றார்.

இந்தியாவிடம் திறமை உள்ளது; ஆனால் முதலீடும் கட்டமைப்பும் போதவில்லை:

மென்பொருள் தொழில்நுட்பத்திலும் பொறியியல் திறனிலும் இந்தியா முன்னணியில் இருந்தாலும், அதன் செயற்கை நுண்ணறிவு இலட்சியங்களை உலகளவில் போட்டியிடக்கூடிய வணிக நிறுவனங்களாக மாற்றுவதற்குத் தேவையான கணினிக் கட்டமைப்புகளும் முதலீடுகளும் இன்னமும் போதுமான அளவில் இல்லை.

சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட, பிளாக்செயின் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக அரசாங்கங்களுக்கு ஆலோசனை வழங்கும் ஆன்டி லியான் இதனைச் சுட்டிக்காட்டுகிறார்.

“உலகில் உருவாகும் தரவுகளில் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு இந்தியாவில் உருவாகிறது. அத்துடன், இந்தியாவிடம் அசாதாரணமான பொறியியல் திறனாளர்கள் உள்ளனர். ஆனால், இந்த மனிதவளத் திறன் வளர்ச்சியடைவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு அவசியம்” என்கிறார் அவர்.

இந்தியாவின் மனிதவளத் திறனைப் பொருளாதார வருமானமாக மாற்றுவதற்குத் தேவையான அம்சங்களை சிங்கப்பூர் வழங்கக்கூடிய நிலையில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

குறிப்பாக, மேம்பட்ட மூலதனச் சந்தைகள், வலுவான ஒழுங்குமுறைச் சட்டக் கட்டமைப்புகள் மற்றும் உலகளாவிய தொடர்பு வசதிகள் ஆகியவை சிங்கப்பூரின் முக்கிய பலங்களாகும்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இந்திய அரசு 1.25 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ‘இந்தியா ஏஐ மிஷன்’ (IndiaAI Mission) திட்டத்தை ஆரம்பித்தது.

புதிய தொழில்நுட்ப நிறுவனங்களை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவுக்கான உட்கட்டமைப்புகளை உருவாக்குதல் மற்றும் ஆராய்ச்சியை மையமாகக் கொண்ட மூன்று செயற்கை நுண்ணறிவுக் கல்வி நிலையங்களை நிறுவுதல் ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.

இந்தியத் திறனாளர்களுக்கு உலகச் சந்தையைத் திறக்கும் சிங்கப்பூர்

இந்தியாவின் தொழில்நுட்பத் திறனாளர்கள், சிங்கப்பூரின் டிஜிட்டல் பொருளாதாரச் சூழலுடன் இணைந்து செயற்கை நுண்ணறிவுத் தீர்வுகளை உருவாக்கி, அவற்றை உலகளாவிய அளவில் ஏற்றுமதி செய்ய முடியும் என்று லியான் கூறுகிறார்.

ஏற்கெனவே சிங்கப்பூர், இந்தியாவிலிருந்து உயர்தர செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களை ஈர்த்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்நுட்ப மனிதவளப் பரிமாற்றமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

பொதுச் சேவைகளுக்கான டிஜிட்டல் தளங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய நாடாக இந்தியா பரவலாகப் பாராட்டப்படுகிறது.

இந்த அனுபவத்தைப் பயன்படுத்தி செயற்கை நுண்ணறிவு சார்ந்த வணிகங்களை விரிவுபடுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த முயற்சிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளிலும் கவனத்தை ஈர்த்துள்ளன.

சிங்கப்பூர் அரசுக்குச் சொந்தமான பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான தெமாசெக் (Temasek), செயற்கை நுண்ணறிவுத் துறையில் மேற்கொள்ளும் முதலீட்டு முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெமாசெக் நிறுவனத்தின் இந்தியப் பிரிவுத் தலைவர் ரவி லம்பா இதுகுறித்துக் கூறுகையில்,

“செயற்கை நுண்ணறிவு என்பது உலகளவில் எங்களுக்கு ஆர்வமூட்டும் முதலீட்டுத் துறையாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, குறிப்பாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் செயலிகள் மற்றும் சேவைகள் சார்ந்த துறையில் இந்தியாவுக்குப் போட்டித்திறன் வாய்ப்புகள் உள்ளன.

இந்தியாவிடம் மிகப்பெரிய திறனாளர்கள் குழுவும் முழுமையான சேவைத் தொழில்துறைச் சூழலும் உள்ளன” என்றார்.

கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புதிய வாய்ப்புகள்:

தென் கொரியாவைச் சேர்ந்த இலாப நோக்கற்ற அமைப்பான ரீடிசென்ட்ரலைஸ் (Redecentralise) நிறுவனத்தின் தலைவர் ஜென்னி செங், இந்தியா–சிங்கப்பூர் ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் இடையில் நேரடியான தொழில்நுட்பத் தொடர்பை உருவாக்குவதாகக் கூறுகிறார்.

“சிங்கப்பூரின் நிறுவன நிர்வாக அறைகளிலிருந்து இந்தியாவின் தொழில்நுட்பப் பூங்காக்கள் வரை நேரடியாக இணைக்கும் ஒரு புதிய பாதை உருவாகி வருகிறது” என்று அவர் குறிப்பிடுகிறார்.

இந்த ஒத்துழைப்பின் நன்மைகள் வணிகத்துறையுடன் மட்டும் நின்றுவிடுவதில்லை.

கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான தொடர்புகள் உருவாகி வருகின்றன.

உதாரணமாக, சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகமான ஐஐடி மெட்ராஸ் (IIT Madras), சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்துடன் (NUS) இணைந்து செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி ஆய்வகங்களை உருவாக்குவதற்கான ஒத்துழைப்பில் ஈடுபட்டுள்ளது.

அதேபோன்று, சிங்கப்பூரின் நிதிப் பரிவர்த்தனை அமைப்புகளும் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்களும் எல்லை தாண்டிய பணப்பரிவர்த்தனை வசதிகளை உருவாக்குவதிலும் இணைந்து செயற்படுகின்றன.

மென்பொருள் பணியாளர்களிலிருந்து உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனர்களாக…

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை பாரம்பரியமான பணியாளர் நேரத்தை அடிப்படையாகக் கொண்ட வெளிப்பணி ஒப்பந்தச் சேவை மாதிரியிலிருந்து மாறி வருகிறது.

அதற்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவை அடிப்படையாகக் கொண்ட, உருவாக்கப்படும் பெறுமதிக்கு முக்கியத்துவம் வழங்கும் வணிக மாதிரியை நோக்கி நகர்கிறது.

இந்த மாற்றத்தில் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகிக்க முடியும் என்று ஜென்னி செங் கூறுகிறார்.

இந்தியாவின் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தமது பணியாளர்களுக்குப் பயிற்சியளிக்கவும் அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் சிங்கப்பூரை ஒரு தளமாகப் பயன்படுத்த முடியும்.

“சிங்கப்பூர் உயர்தரத் தயாரிப்பு வடிவமைப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் உலகளாவிய விநியோக மையமாகச் செயற்பட முடியும்.

இதன் மூலம் இந்தியத் தொழில்நுட்ப நிபுணர்கள் சர்வதேச ஒழுங்குமுறைத் தரநிலைகளுக்கு ஏற்ப செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகளை உருவாக்கக் கற்றுக்கொள்வார்கள்.

இதனால் அவர்கள் பின்னணியில் மென்பொருள் நிரல்களை எழுதும் பணியாளர்களாக மட்டும் இல்லாமல், உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களை உருவாக்கும் தொழில்முனைவோராகவும் உயர்ந்த பெறுமதியுள்ள தொழில்நுட்பச் சொத்துகளை உருவாக்குபவர்களாகவும் மாற முடியும்” என்கிறார் அவர்.

ஒத்துழைப்புக்குத் தடையாக இருக்கும் சட்டங்களும் விசா நடைமுறைகளும்

எனினும், இந்தியா–சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பில் சில முக்கியமான தடைகளும் உள்ளன.

குறிப்பாக, இரு நாடுகளிலும் காணப்படும் மாறுபட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஒழுங்குமுறைகள் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.

இந்தியாவின் கடுமையான தரவு உள்ளூர்மயமாக்கல் விதிமுறைகள், சிங்கப்பூரின் திறந்த தரவுப் பரிமாற்ற மாதிரியுடன் முரண்படக்கூடும் என்று ஜென்னி செங் எச்சரிக்கிறார்.

இந்தியாவில் சில குறிப்பிட்ட துறைகளுக்குத் தரவுகளை நாட்டுக்குள்ளேயே சேமிக்க வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளன. இருப்பினும், பொதுவான தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் இந்தியாவுக்குள்ளேயே சேமிக்கப்பட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

மற்றொரு முக்கியமான தடை தொழில்நுட்ப நிபுணர்களின் நாடுகளுக்கிடையிலான பயணமாகும்.

விசா நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள், இரு நாடுகளின் பொறியாளர்களும் ஆராய்ச்சியாளர்களும் நேரடியாக இணைந்து பணியாற்றுவதற்குத் தடையாக உள்ளன.

இதற்குத் தீர்வாக, ஆராய்ச்சிக்கான தரவுப் பரிமாற்றத்தை எளிதாக்கும் இருதரப்பு செயற்கை நுண்ணறிவுத் தரவு இணைப்பு ஒப்பந்தம் ஒன்றை இரு அரசாங்கங்களும் ஏற்படுத்த வேண்டும் என்று அவர் பரிந்துரைக்கிறார்.

அத்துடன், தொழில்நுட்ப நிபுணர்களுக்கான விசேட விரைவு விசா நடைமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்கிறார்.

தென்கிழக்கு ஆசியா முழுவதும் விரிவடையும் வாய்ப்பு..

இந்தியா–சிங்கப்பூர் செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்பு எதிர்காலத்தில் தென்கிழக்கு ஆசியாவின் ஏனைய நாடுகளுக்கும் விரிவடையக்கூடும்.

குறிப்பாக இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் புதிய வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.

இந்தோனேசியாவுக்கு இந்தியா ஏற்கெனவே தனது டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு அனுபவங்களையும் தொழில்நுட்பங்களையும் பகிர்ந்து வருகிறது.

வியட்நாம் வன்பொருள் உற்பத்தித் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது.

மலேசியா பிராந்திய தரவு மையங்களுக்கான முக்கிய மையமாகத் தன்னை நிலைநிறுத்த முயற்சிக்கிறது.

2026–2030 காலப்பகுதிக்கான ஆசியான்–இந்தியா செயற்றிட்டத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்தித் தொழில்நுட்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற ஆசியான்–இந்தியா டிஜிட்டல் அமைச்சர்கள் கூட்டத்தில், டிஜிட்டல் துறையில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்துவதற்கான உறுதிப்பாடும் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

ஆர்க்ரூட்ஸ் (Arkroots) முதலீட்டு நிதியத்தின் பொதுப் பங்காளியான மெலடி சான் கூறுகையில், அந்தக் கூட்டத்தில் திறன் மேம்பாடு, தொழில்நுட்பத் தரநிலைகள் மற்றும் நடைமுறை அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு ஒத்துழைப்புகளுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

இந்தியா–மலேசியா இடையிலான கலந்துரையாடல்களில் புதிய தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் திறனாளர்கள் தொடர்பான ஒத்துழைப்பு ஆராயப்பட்டு வருகிறது.

அதேவேளை, இந்தியப் பல்கலைக்கழகங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் குவாண்டம் கணினித் தொழில்நுட்ப ஆராய்ச்சிகளுக்காக வியட்நாமில் கூட்டாளிகளைத் தேடி வருகின்றன.

இந்தியாவின் மிகப்பெரிய சவால்: திறனாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது

இந்தியா பிளாக்செயின் கூட்டமைப்பின் தலைவர் ராஜ் கபூர், இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்று திறமையான ஆராய்ச்சியாளர்களும் தொழில்முனைவோரும் வெளிநாடுகளுக்குச் செல்வதாகக் கூறுகிறார்.

ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதுபவர்கள் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குபவர்கள் அடங்கிய வலுவான மனிதவளத்தின் அடிப்படையில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் இருப்பதாக அவர் குறிப்பிடுகிறார்.

இருப்பினும், போதுமான முதலீடும் வாடிக்கையாளர்களும் கிடைக்காததால் பல ஆராய்ச்சியாளர்களும் தொழில்நுட்ப நிறுவனர்களும் அமெரிக்காவுக்குச் செல்கின்றனர்.

இந்தத் திறனாளர்களை இந்தியாவிலேயே தக்கவைத்துக்கொள்வதற்கு அதிகளவிலான முதலீடு அவசியம்.

அந்தத் தேவையை நிறைவேற்றுவதில் சிங்கப்பூர் முக்கிய பங்கு வகிக்க முடியும்.

இந்தியாவுக்கு நேரடி வெளிநாட்டு முதலீட்டுப் பங்கு மூலதனத்தை வழங்கும் மிகப்பெரிய நாடாக சிங்கப்பூர் தொடர்ந்து விளங்கி வருகிறது.

ஆனால், அந்த முதலீட்டில் கணிசமான பகுதி தற்போது சொத்துத் துறை மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை நோக்கியே செல்கிறது.

இதில் மாற்றம் தேவை என்று ராஜ் கபூர் வலியுறுத்துகிறார்.

“அடுத்த கட்டமாக, இந்த முதலீட்டில் ஒரு பகுதியை இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த புதிய நிறுவனங்களுக்கான துணிகர முதலீட்டு நிதிகளுக்கும் வளர்ச்சி நிதிகளுக்கும் திருப்பிவிட வேண்டும்.

சொத்துத் துறை மற்றும் உட்கட்டமைப்பில் மட்டும் முதலீடு செய்வதற்குப் பதிலாக இவ்வாறு செயற்பட்டால், செயற்கை நுண்ணறிவுத் துறையின் வளர்ச்சிப் போக்கையே மாற்ற முடியும்” என்கிறார் அவர்.

உலகச் சந்தைக்கான நம்பகமான சோதனைக் களமாக சிங்கப்பூர்..

இந்தியாவின் செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகளை உலகச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதிலும் சிங்கப்பூர் முக்கிய பங்காற்ற முடியும் என்று ராஜ் கபூர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவில் உருவாக்கப்படும் தொழில்நுட்பத் தயாரிப்புகளை சிங்கப்பூரில் பரிசோதித்து, அவற்றின் செயல்திறன் மற்றும் சர்வதேச தரநிலைகளுக்கு இணங்கும் தன்மையை உறுதிப்படுத்த முடியும்.

இவ்வாறு சிங்கப்பூரில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்ட ஒரு தயாரிப்பை உலகின் பிற நாடுகளில் சந்தைப்படுத்துவது எளிதாக இருக்கும்.

“சிங்கப்பூரில் தனது திறனை நிரூபித்த ஒரு தொழில்நுட்பத் தயாரிப்பை உலகளாவிய வங்கிகள், சுகாதார அமைப்புகள் மற்றும் அரசாங்கங்களுக்கு விற்பனை செய்வது மிகவும் எளிதானதாக இருக்கும்” என்று அவர் கூறுகிறார்.

செயற்கை நுண்ணறிவு உலகில் புதிய சக்தியாக உருவெடுக்குமா இந்தியா?

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுடன் நேரடியாகப் போட்டியிடுவதற்குப் பதிலாக, தனது மனிதவளத் திறனை சிங்கப்பூரின் முதலீடு, உட்கட்டமைப்பு மற்றும் சர்வதேச வணிகத் தொடர்புகளுடன் இணைப்பதன் மூலம் இந்தியா புதிய வளர்ச்சிப் பாதையை உருவாக்க முடியும் என்பதே ஆய்வாளர்களின் மதிப்பீடாக உள்ளது.

இந்தக் கூட்டுறவு வெற்றியடைந்தால், இந்தியா வெறுமனே உலக நாடுகளுக்கு மென்பொருள் சேவைகளை வழங்கும் நாடாக இருப்பதிலிருந்து மாறி, உலகச் சந்தைக்கான செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகளையும் தொழில்நுட்பத் தீர்வுகளையும் உருவாக்கி ஏற்றுமதி செய்யும் முக்கிய நாடாக உருவெடுக்கக்கூடும்.

அதேநேரத்தில், சிங்கப்பூர் அந்தத் தொழில்நுட்பங்களை உலகச் சந்தைகளுடன் இணைக்கும் முதலீட்டு, பரிசோதனை மற்றும் வர்த்தக மையமாக வளரக்கூடும்.

இந்தியாவின் தொழில்நுட்ப மனிதவளமும் சிங்கப்பூரின் மூலதனமும் ஒன்றிணைவது, ஆசியாவின் செயற்கை நுண்ணறிவுப் பொருளாதாரத்தில் புதிய அதிகார மையமொன்றை உருவாக்குமா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கியமான கேள்வியாகும்.

(தமிழாக்கம்: ஆங்கில மூலக் கட்டுரையின் அடிப்படையில்.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *