மட்டக்களப்பு முணுமுணுப்பு: இடம் கொடுத்தால் மடம் கட்டுவோர் கதை…! (மௌன உடைவுகள்-99)

மட்டக்களப்பு முணுமுணுப்பு: இடம் கொடுத்தால் மடம் கட்டுவோர் கதை…! (மௌன உடைவுகள்-99)

   — அழகு குணசீலன் —

மின்னாமல் முழங்காமல் திடீரேன ஒரு செய்தி சமூக ஊடகங்களில் வலம்வந்தது. உத்தியோகபூர்வ பொது அழைப்பிதழ் ஒன்றும் உலா வந்தது. மட்டக்களப்பில் உலகத்தமிழ் கலை இலக்கிய மாநாடு ஆகஸ்ட் 2&3 ஆம் திகதிகளில் நடைபெறவிருப்பதாக அறியக்கிடைத்தது.  இலங்கை கிழக்கு மாகாண அரசின் ஏற்பாட்டில் அது நடைபெற இருப்பதாகவும் , மிகப்பெரும் ஆளுமைகள் பங்கேற்கும் இம்மாநாட்டில் அனைத்துத் தமிழ் ஆர்வலர்களையும் அன்புடன் அழைக்கினறோம் என்று அந்த அறிவிப்பு பறைசாற்றியது.

உலகத் தமிழ் கலை இலக்கிய மாநாடு என்றால் என்ன கள்ளுக்கடைக்கு முன்னால் அல்லது  அங்கே காரம் சுண்டல் விற்கும் தள்ளுவண்டிக்கருகே கூடிக்கலைவதா?. உலகளாவிய மாநாடு மட்டக்களப்பில் எங்கு நடைபெறுகிறது? யாரெல்லாம் மிகப்பெரும் ஆளுமைகள் பங்கேற்கிறார்கள்? தமிழ்,கலை, இலக்கியம் தொடர்பான ஒரு உலக மாநாட்டில் என்னென்ன நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன?  எந்தெந்த நாடுகளில் இருந்து ஆளுமைகள், பேராளர்கள் பங்கு கொள்கிறார்கள் என்ற விபரங்கள் இன்றி மொட்டைக்கடிதபாணியில் ஒரு அறிவிப்பு. எடுத்த எடுப்பிலேயே மட்டக்களப்பின் வாசமே அறியாத யாரோ ஆட்களின் விளையாட்டு என்று தெரிந்தது.

பின்னர் முகநூலில் இன்னொரு பதிவு . “இலங்கை மட்டக்களப்பு நகரில் நடைபெறவுள்ள உலக தமிழ் கலை இலக்கிய பண்பாட்டு மாநாட்டின் தலைவராக பொறுப்பேற்றுள்ளேன். பேராளர்களின் வருகை மற்றும் கருத்தரங்கு ஏற்பாடுகளை கவனிப்பதற்காக இன்று காலை சென்னை விமான நிலையத்தில் இருந்து கொழும்புக்கு செல்கிறேன். ஏனைய தமிழ்நாட்டு, அயல்நாட்டு பேராளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் இருந்து புறப்பட இருக்கிறார்கள்”. என்று ஒரு பதிவு பகிரப்பட்டது. 

அழைப்பிதழில் இருப்பதற்கு மாறாக இவரது பதிவில் மாநாட்டு தலைப்புக்கு ‘பண்பாட்டு’ வால் வைக்கப்பட்டுள்ளது. அவர்தானே தலைவர் தலைப்பை மாற்றினால் என்ன, தலையை மாற்றினால் என்ன? மட்டக்களப்பு கல்விச்சமூகத்தை உள்வாங்காத ஒரு சில தனிநபர்களின் திருட்டுத்தனம் வெளிப்பட்டது.

அதுசரி உங்களுக்கு மாநாட்டு தலைமைப்பதவியை தந்தது யார்? யாரிடம் இருந்து பொறுப்பேற்றீர்கள் ? அல்லது யாரிடம் இருந்து “வாங்கினீர்கள்”? மட்டக்களப்பில் இடம்பெறும் மாநாட்டிற்கு தலைமைதாங்க நீங்கள் யார்?  இன்று வரை உங்களுக்கும் மட்டக்களப்புக்கும் உள்ள தொடர்பு என்ன? இவை எல்லாவற்றையும் விடவும் மட்டக்களப்பை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? வருபவர்,போறவர் எல்லாம் தலைமையேற்கவும், மாநாடு நடாத்தவும் மட்டக்களப்பு ஆலையில்லா ஊரில்லை இலுப்பைப்பூ சர்க்கரையாவதற்கு. 

இவர் ஜேர்மனியில் வசிப்பவர் என்று அறியக்கிடக் கிடைக்கிறது. தமிழ்நாட்டு பெண்ணியத்தைத்தான் விட்டு விடுவோம். அது அப்படியும் இப்படியும். ஜேர்மனி பெண்ணிய எழுச்சியும், மொழி வளமும், மாற்றமும் கூடவா உங்களுக்கு தெரியாது?. ஜேர்மன் மொழியில் (டொச்) ஆண்பாலுக்கும், பெண்பாலுக்கும் வெவ்வேறு சொற்பிரயோகங்கள் உண்டு. பொதுப்பாற்சொற்கள்  ஆண் ஆதிக்க வன்மம் என்பதால் தனிப்பால் சொற்கள் பெண்ணியநோக்கில் முக்கிமானவை. ஒரு அடிப்படை -ஆரம்ப மாற்றத்தை குறித்து நிற்பவை. மொழிவளம்கொண்ட செம்மொழி தமிழை ஆங்கிலத்தில் எழுதி அப்படியே தமிழில் மொழிபெயர்க்கின்ற நவகாலனித்துவ மனநோய் இது .

ஒரு பெண்ணை ஜேர்மன் மொழியிலும் , தமிழ்மொழியிலும் தலைவர் என்று அழைப்பதில்லை. தலைவி என்றுதான் அழைப்பது. (ஆண் – தலைவர் -Prasident, / பெண்- தலைவி – Präsidentin) மொத்தத்தில் பெண்ணியமும் தெரியாது, வாழும் நாட்டு மொழியும், தெரியாது, பிறந்த நாட்டு மொழியும் தெரியாது உலக மாநாடு நடத்த வருகிறீர்கள். ஆலை இல்லா ஊருக்கு அதுசரியாக இருக்கலாம் எங்கள் மட்டக்களப்பு மண்ணுக்கு இது சரிவராதுகாண்.  இங்கு இரண்டு பல்கலைக்கழகங்களும்,ஒரு வளாகமும் உண்டு.

“தமிழ் நாட்டு, அயல்நாட்டு பேராளர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் சென்னையில் இருந்து புறப்பட இருக்கிறார்கள்” என்று பதிவிடுகிறீர்கள். அப்போ உலகம் முழுவதும் தமிழ்நாட்டிற்கு அயல்நாடுதானோ.?   இந்த நிலையில் உலகமாநாடு சரியான தலைப்பு தான். பூகோளமும் பூச்சியம்.

நீங்கள் சாப்பாட்டை படம் எடுங்கள், யானையை படம் எடுங்கள், பயணவாகனத்தை படம் எடுங்கள், வேகவீதியைப் படம் எடுங்கள். அது உங்களின் தனிப்பட்ட விருப்பும் வெறுப்பும். ஆனால் இவற்றை கொண்டு நீங்கள் படம்காட்ட மட்டக்களப்பு ஒன்றும் சினிமாகொட்டிகை இல்லை தாயே. இவை எல்லாம் உல்லாசப்பிரயாணிகளுக்கு கிளுகிளுப்பானவை அதில் தவறில்லை ஆனால் இந்த படங்களோடு மட்டக்களப்பு மாநாட்டை தொடர்புபடுத்துவது மலினப்படுத்துவதும், இழிவுபடுத்துவதுமாகும்.

 ஒரு மாநாட்டிற்கு எத்தனை அழைப்பிதழ்கள் ? அத்தனையிலும் வெளிப்படையான,தேவையான தகவல் இன்னும்  முழுமையாக இல்லை.  அதில் திருவள்ளுவர் சிலை திறப்புவிழா ஒரு நிகழ்வு. மேலும் இடம் வெபர் விளையாட்டரங்கம் என்று இருக்கிறது. மூன்றாவது அழைப்பிதழ் ஒன்றும் பார்க்கக்கிடைத்தது. இரண்டாம், மூன்றாம் அழைப்பிதழ்களில் கிழக்கு மாகாண “அரசு” மறைந்து விட்டது. கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மற்றும் மட்டக்களப்பு மாநகரசபை ஏற்பாட்டில் என்று இருக்கிறது.  உண்மையில் இந்த மாநாட்டை எந்த “அரசு “நடத்துகிறது?  மாகாணசபைகளை  மாகாண அரசு என்று அழைப்பதற்கு அரசியல் அமைப்பு இடம்கொடுக்கிறதா? தமிழ்நாட்டு அரசு  போல் பழக்க தோஷத்தில் இந்த அறிவிப்பு அச்சிடப்பட்டுள்ளது. இதனால் தென்னிலங்கையில் கிளம்பப்போகும் பூதத்தை தணிப்பதற்காகவே மற்றைய அழைப்பிதழ்கள் “அரசு” நீக்கம் செய்து இரவோடிரவாக அச்சிடப்பட்டுள்ளன.

கிடைக்கின்றன தகவல்களின் படி உங்களின் “உலகில்” இருந்து 13 பேராளர்கள் வருவதாக கதையடிபடுகிறது. இவர்கள் யார்? இவர்கள் மட்டக்களப்பு மட்டக்களப்பு தொடர்பான தமிழ், கலை, இலக்கிய, பண்பாட்டு ஆய்வுக்கு பொருத்தமற்றவர்கள் என்பதால் பெயர் அற்றவர்களா? அவர்களை இறக்குமதி செய்து மலிவு விலையில் மட்டக்களப்பு சந்தைக்கு கொண்டு வருகிறீர்களா என்று எண்ணத்தோன்றுகிறது?

மட்டக்களப்பின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பு பற்றி இவர்களுக்கு என்ன தெரியும்? இதுவரையில் இத்துறையில் இவர்களின் பங்களிப்பு என்ன? அல்லது பொதுவாக தமிழ், கலை, இலக்கியம், பண்பாட்டில் இவர்களின் ஆளுமை என்றெல்லாம் எங்களுக்கு சொல்லாமல் இறக்குமதி செய்வதற்கான “அனுமதி/உத்தரவு” உங்களுக்கு எங்கிருந்து கிடைத்தது. மட்டக்களப்பின் பெயரில் அறக்கட்டளை சேகரித்த பணமும், மக்களின் வரிப்பணமும்  செலவு செய்யப்படும் போது அதற்கான தகவல் அறியும் உரிமை மட்டக்களப்பு மக்களுக்கு இருக்கிறது.

மட்டக்களப்பின் பாரம்பரியக்கைகள், கூத்து, கும்மி, கோலாட்டம், சிலம்படி, கொம்பு முறிப்பு, மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்கள் போன்றவை குறித்தும், கிராமிய கலை, இலக்கிய, பண்பாடு மற்றும் மொழிவளம் குறித்தும், ஆகம வழிபாட்டு முறைமைக்கு மாறான சிறுதெய்வ வழிபாடுகள், கண்ணகை உள்ளிட்ட வழிபாட்டு நம்பிக்கைகள் குறித்தும் மாநாட்டில் பேசப்படுமா? கிழக்கு பல்கலைக்கழகங்களின் சமூகத்திற்கு இந்த மாநாட்டில் வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம் என்ன? இலங்கையின் பன்மைத்துவ மத, கலாச்சார பண்பாட்டைகொண்ட மக்களின் வாழ்வில், இன,மத நல்லிணக்கம் தொடர்பான ஆய்வரங்குகள் உண்டா? அதில் பேருரை/ஆய்வுரை செய்யவுள்ள எம்மவர்கள் யார்? என்றெல்லாம் கேள்விளை அடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 அல்லது நீங்கள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தரிடம் ஒப்படைக்கும் இரண்டாம் நாள் மாநாட்டை முழு நாளும் அங்கு நடாத்துவதற்கான “உத்தரவு” கடிதத்துடன் அவர்களின் பங்கு இடம் தருவது மட்டும்தானா? உங்கள் பதிவு நீங்கள் இடம் கேட்டு விண்ணப்பிப்பதாகவோ ? அல்லது பல்கலைக்கழகம் இடம் தருவதாக உத்தரவாதம் வழங்குவதாகவோ இல்லை. நீங்கள் உத்தரவு போடுவது போல்தான் உள்ளது. இந்த அதிகாரம் தலைமை தாங்க வந்த உங்களுக்கு யார் தந்தது. கிழக்கு மாகாண கல்வி, பண்பாட்டு அலுவல்கள், மட்டக்களப்பு மாநகரசபை அதிகாரிகளின் பங்கு இந்த மாநாட்டில் என்ன?  சுற்றுச்சூழல் பற்றி உரத்துப்பேசப்படும் இன்றைய உலகில் “குருத்தோலை”     வாழை”வெட்டுக்களை  செய்வதுதானா?. இது மட்டக்களப்பின் கிராமிய பொருளாதாரத்தில் ஏற்படுத்தப் போகும் பாதிப்பு என்ன? இதனாலும் உங்களுக்கு ஏற்றுமதி நன்மைதான்.

இதற்கு உங்களை மட்டும் பொறுப்புக்கூற முடியாது ‘பெரியவர்கள், பேராசிரியர்கள் ‘ சிலர் தங்களுக்குள் பல்கலைக்கழகத்திற்கு உள்ளும், வெளியிலும் மோதிக்கொண்டு தங்கள் மேதாவிதனத்திற்காக போராடுகிறார்கள். பல்கலைக்கழக சமூகத்தை, மாணவர்களை இரண்டாகப் பிரித்து தங்கள் தங்கள் கூடைக்கு வீசிக்கோண்டிருக்கிறார்கள். க. சுபாஷிணி என்ற ஒருவரை யார் தங்களுக்கு விளம்பரம் தேட இறக்குமதி செய்தார்களோ அவர்கள் இப்போது ஓடி ஒழித்து விட்டார்கள். இது முதற்தடவை அல்ல. பிரச்சினைகள் முற்றி சமூகம் கேள்வி கேட்கத்தொடங்கும் போது இந்த ஒழிந்து கொள்ளல் தனக்கு சம்பந்தம் இல்லை என்று காட்டிக்கொள்ளல் மட்டக்களப்பில் ஒரு தொடர்கதை.

இனியாவது இவர்களை நம்பி, இவர்களுக்கு பின்னால் கூத்தாடுவதில் மட்டக்களப்பு கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் ஒரு சுபாஷிணியை மறுத்து மட்டக்களப்பில் நடைபெறும் நிகழ்வொன்றை நெறிப்படுத்த முடியாது பலவீனமாக உள்ளனர். இறக்குமதி செய்து , தங்களுக்கு தங்களே சால்வை போட்ட போதே தெரிந்திருக்க வேண்டும் . இப்போது வெள்ளம் தலைக்குமேலால் ஓடுகிறது எதிர் நீச்சல் அடிக்க துப்பில்லை ஒதுங்கிவிட்டார்கள். 

இனி என்ன … ?

இது ஜல்லிக்கட்டு, சிவராத்திரி வரிசையில் மூன்றாவது!

எங்களை நாங்களே சுயநிர்ணயம் செய்ய முடியாது போன சூழல்.

அகத்தாரை ஒதுக்கி புறத்தார் எங்களை குத்தகைக்கு எடுத்த கதை. அதற்கு துணைபோன ‘பெரியவர்கள் ‘ மட்டக்களப்பு சமூகத்திற்காக குரல் கொடுக்காது  ஓடி ஒழித்த வரலாறு மீண்டும் ஒரு முறை பதிவாகிறது.

இடம் கொடுத்தால் மடம் கட்டுபவர்களின் ஒரு நீண்ட  மறைகரம் பாக்கு நீரிணை ஊடாக மட்டக்களப்பை தொட்டிருக்கிறது.

பொறுப்பு கூறுவது யார்?