“மாகாணசபை தேர்தல்கள் எட்டு வருடங்களாக நடத்தப்படாமல் இருப்பதால் மாகாணங்களின் நிருவாகங்கள் மக்கள் பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்படாமல் அவர்களின் ஜனநாயக உரிமை மறுக்கப்படுகிறது என்ற கவலையில் அந்த தேர்தல் கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக கூறமுடியாது. அரசாங்கம் மக்கள் செல்வாக்கை இழந்து வருகிறது என்று காண்பிக்க வேண்டும் என்பதே இந்த கட்சிகளின் நோக்கம்.
மறுபுறத்தில், மாகாணசபை தேர்தல்களை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கு மக்கள் போராட்ட இயக்கத்தை முன்னெடுக்கப் போவதாக இடைக்கிடை அறிவிக்கும் சில தமிழ் கட்சிகள் சில நாட்களில் அதை மறந்து விடுகின்றன. உண்மையில், இது விடயத்தில் வடக்கு, கிழக்கில் இருந்தோ அல்லது தென்னிலங்கையில் இருந்தோ அரசாங்கத்துக்கு எந்தவிதமான நெருக்குதலும் கிடையாது.”
