‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரை உணர்த்தும் உண்மைகள் என்ன?

   — வி. சிவலிங்கம் —  

கடந்த 03-02-2021 ம் திகதி கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பமாகியுள்ள ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற யாத்திரை புதிய அத்தியாயத்தைத் தமிழ் அரசியலில் ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப நிகழ்வுகளில் சகல சமூகங்களின் பங்களிப்பு உற்சாகம் தருகிறது. சமீப காலமாக கிழக்கு மாகாணத்தில் அரச ஆதரவுடன் புதைபொருள் ஆய்வு, தரிசுநில பயன்பாடு, விவசாய உற்பத்தி அதிகரிப்பு என்ற பெயர்களில் இடம்பெற்று வரும் ஆக்கிரமிப்பு என்பது சமான்ய மக்களின் வாழ்வின் அடிப்படைகளுக்கு அச்சுறுத்தலாக மாற்றம் பெற்று வருவதன் அறிகுறியாகவே உள்ளது. இப் பிரச்சனைகள் குறித்து அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திலும், ஊடகங்களிலும் பேசுவதன் மூலம் மாற்றங்கள் ஏற்பட்டுவிடாது என்ற உண்மையை மக்கள் தற்போது நன்கு உணர்ந்துள்ளதால்தான் நேரடி நடவடிக்கைகளில், போராட்டங்களை அவர்களே தமது கைகளில் எடுத்துள்ளனர்.  

கிழக்கில் இருந்து வடக்கு நோக்கி 

பொதுவாகவே இப்போராட்டங்கள் முதலில் வடக்கில் ஆரம்பித்து அவை பின்னர் கிழக்கில் விஸ்தரிப்பதாகவே காணப்பட்டன. ஆனால் இம்முறை இவை கிழக்கில் ஆரம்பித்து வடக்கை நோக்கி நகர்வது புதியதொரு விடியலை நோக்கி மாற்றங்கள் திரும்புவதாகவே கருதவேண்டியுள்ளது. சமூகங்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி, மோதல்களை உருவாக்கி அதன் மூலம் தமது பெருந்தேசியவாத கனவுகளை நிறைவேற்ற எண்ணும் இனவாதிகளுக்கு இவை பெரும் சவாலாகவே அமையும். தமிழ்ப் பிரதேசங்களில் அரச ஒடுக்குமுறைகள் மிகவும் அதிகரித்துக் காணப்பட்ட போதிலும் அவற்றிற்கெதிராக மக்கள் அமைப்புகள் போரிற்குப் பின்னர் திரண்டு எழவில்லை. ஏனெனில் அவற்றை அரசியல்வாதிகள் உட்புகுந்து கையிலெடுத்துத் தமது அரசியல் ஆதாயங்களை நோக்கித் திருப்புவதே வரலாறாகக் காணப்பட்டது. இதனால் சுயாதீனமான சிவில் அமைப்புகளின் செயற்பாடு செயலிழந்தே காணப்பட்டது. அத்துடன் போரின் காரணமாக மக்கள் அமைப்புகள் மிகவும் பலவீனமுற்று கட்சிகளின் பின்னால் அல்லது தனி நபர்களின் பின்னால் அணி திரண்டு ஊடகங்களின் பரபரப்பு செய்திகளுடன் முடிவடைந்த வரலாறாகவே உள்ளன. 

இப்பின்னணியில் தற்போது கிழக்கு மாகாணத்தில் உருவாகியுள்ள இப்புதிய அலை முற்றிலும் மாறுபட்ட புறச் சூழலில் உருவாகியுள்ளது. கிழக்கு மாகாண மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளின் தாக்கத்தின் எதிரொலியாகவே இந்த யாத்திரை காணப்படுகிறது. கிழக்கிலிருந்து முதற் தடவையாக வடக்கை நோக்கி ஆரம்பித்துள்ள இந்த இயக்கம் வடக்கு மக்களுக்கான புதிய செய்தியை அதாவது இன பேதங்களுக்கு அப்பால் தமிழ் பேசும் மக்களின் இணைப்பின் அவசியத்தை வெறுமனே சொல் வடிவத்தில் அல்லாது செயலுருவில் நடத்திக் காண்பிக்கிறார்கள்.  

கிழக்கில் முஸ்லீம் மக்கள் மிகவும் கொந்தளித்த நிலையில் தமது உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத இக்கட்டான நிலையில் உள்ளனர். இவை கிழக்கில் மட்டுமல்ல நாடு தழுவிய ரீதியில் நிலமை அவ்வாறுதான் உள்ளது. ஒரு புறத்தில் சிங்கள மக்கள் மத்தியில் செறிந்து வாழும் முஸ்லீம் மக்கள் மேல் எந்நேரமும் இனவாத தாக்குதல் நடத்தும் வேளையை எதிர்பார்த்து தீவிர சிங்கள பௌத்த இனவாதிகள் காத்திருக்கிறார்கள். இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி நிலமைகளை மேலும் மோசமாக்க அனுமதிப்பது விவேகமானது அல்ல என்ற எச்சரிக்கை தேசத்தின் பொது நன்மை குறித்து கவலைப்படும் பலரும் விடுக்கும் எச்சரிக்கையாக உள்ளது. அத்துடன் தமது அரசியல் தலைமைகள் இவ்வாறாக முஸ்லீம் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளைப் பயன்படுத்தி அரசுடன் இணைந்து தமது சுய நலன்களைப் பாதுகாக்கும் நிலமைகளை உணர்ந்து தமது எரிச்சல்களைக் கொட்டித் தீர்க்கும் வேளையை எதிர்பார்த்துக் காத்துள்ளனர். தமக்கான மாற்றங்கள் ஏற்படும் வேளை வரை காத்திருக்காமல் இணைந்து செயற்பட முனைகிறார்கள். மறுபக்கத்தில் தமது பிரச்சனைகளை மிகவும் காத்திரமாகவும், உணர்வுபூர்வமாகவும் பாராளுமன்றத்திலும் மற்றும் சர்வதேச அரங்குகளிலும் தமிழ் அரசியல் தலைமைகள் எடுத்துச் செல்வது புதிய சிந்தனைகளை அம்மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இன ஐக்கியத்தின் அவசியம், சிங்கள பௌத்த பெருந்தேசிய இனமையவாதத்திற்கு எதிரான பரந்த முன்னணி பற்றிச் சிந்திக்கிறார்கள்.   

ஒடுக்கு முறைக்குள் வாழ்வதை விதியாக்க முடியாது 

முஸ்லீம் அரசியல் தலைமைகள் ஒரு புறத்தில் சிங்கள பௌத்த இனவாத சக்திகளுக்கு இடமளிக்காத வகையில் செயற்படும் வேளையில், ஏனைய சிறுபான்மை இன அரசியல் தலைமைகளுடன் பொது ஆபத்திற்கு எதிரான அணிகளை உருவாக்குவதில் தயங்குவது குறித்து பலமான விவாதங்கள் அவர்கள் மத்தியில் தற்போது உருவாகியுள்ளது. தமக்கு மத்தியிலுள்ள சந்தர்ப்பவாத சக்திகளைக் களையெடுக்கும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் கலந்து வாழும் நிலை இருக்கிறது என்பதற்காக காலம் முழுவதும் ஒடுக்குமுறைகளுக்குள் வாழ்வது ஓர் விதியாக மாற முடியுமா? எதிர்காலச் சந்ததியினரையும் இவ்வாறான அடிமை வாழ்விற்குள் தள்ளுவதா? சமத்துவமான சமூக அமைப்பைத் தோற்றுவிக்க முடியாதா? அவ்வாறானால் பெரும்பான்மைக்குள் சிறுபான்மையாக வாழ்வது என்பது இரண்டாம்தர வாழ்வா? நாம் இலங்கையின் பிரஜைகள் அல்லவா? பல்வேறு நாடுகளில் சிறுபான்மை சமூகங்கள் இணைந்து அமைதியாக வாழ்கின்றனவே, அது எவ்வாறு சாத்தியமாகிறது? அரசியல்வாதிகள் மாற்றுத் தீர்வை நோக்கி அல்லது சம உரிமையுடன் ஒரே நாட்டின் சகோதர பிரஜைகள் என்ற வகையில் வாழ முடியாதா? இவ்வாறு சிந்திக்காமல் ஏன் எம்மைத் தொடர்ந்தும் அச்சத்திற்குள் வாழ எமது அரசியல்வாதிகள் நிர்ப்பந்திக்கிறார்கள்? இவர்கள் தத்தமது சுயநலன்களுக்காக மறைமுகமாகத் தடுக்கிறார்களா? என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.  

‘பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரை’ என ஆரம்பித்துள்ள மக்கள் இயக்கம் பல அரசியல்வாதிகளுக்குப் புதிய நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அரச உதவிகளைப் பெறும் நோக்கில் தமது அரசியல் போக்கினை மாற்றியுள்ள சில தமிழ் அரசியல்வாதிகள் தற்போது அரசு எடுத்து வரும் மக்கள் விரோத போக்குகளுக்கு எதிராக செயற்பட முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். வெறுமனே அபிவிருத்தி அரசியல் என்ற அடிப்படையில் அரசுக்கு ஆதரவை வழங்கி வரும் இவர்கள் அரசின் மக்கள் விரோத போக்கினையும் அனுசரித்துச் செல்லும் துர்ப்பாக்கிய நிலையிலுள்ளனர். தற்போது கிழக்கு மாகாணத்தில் சமான்ய மக்களின் அன்றாட வாழ்வு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேய்சல் தரை விவகாரத்தில் பசு மாடுகள் திருட்டு, வதை, பண்ணையாளர்களின் வருமானத்தில் பாதிப்பு என்பன எவ்வித மாற்று ஏற்படுகளும் இல்லாது தொடர்வதால் மக்கள் மட்டுமல்ல மிருகங்களும் அநியாயமாக உயிரிழக்கின்றன. இவற்றை எந்த மனிதனும் வெறுமனே பார்த்திருக்க முடியவில்லை. இலட்சக் கணக்கான மிருகங்கள் அநியாயமாக வதைக்கப்படுவதை நியாய புத்தி மிக்க எந்த மனிதனும் அனுமதிக்க முடியாது.  

கிழக்கு மாகாணத்தில் ஒரு புறத்தில் ராணுவ ஆக்கிரமிப்பு, குடியேற்றங்கள் எனத் தொடர்கையில் மறு புறத்தில் நில அபகரிப்பு என்பனவும், முஸ்லீம் மக்களின் அடிப்படை உரிமைகள் கொரோனா நோய் என்ற பெயரில் சர்வதேச அறிவுறுத்தல்களை மீறி சிங்கள பௌத்த ஆட்சியின் பலத்தை உணர்த்தும் வகையில் மீறப்படுவதும் ஓர் பொதுவான உளவியல் நிலைக்கு சகல மக்களையும் இணைக்க உதவியுள்ளது. இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பது என்பது அம்மக்கள் வரலாற்றுக் காலம் முதல் பின்பற்றப்படும் வழிமுறையாகும். இவற்றை எவ்வித விஞ்ஞானபூர்வ ஆதாரமும் இல்லாமல் ஆதிக்கத்தை நிலைநாட்டும் ஒரே நோக்கத்தில் செயற்படுவது அம்மக்களின் இலங்கைப் பிரஜா உரிமையைக் கேள்விக்குட்படுத்துவதாகும். இதே போன்ற ஓர் நிலையிலேயே மலையக மக்களும் உள்ளனர். அவர்கள் பல ஆண்டுகளாக தினக்கூலியாக 1000 ருபா வழங்கும்படி கோரி வருகிறார்கள். ஆனால் அரச ஊழியர்களுக்குச் சம்பள அதிகரிப்பு செய்பவர்கள் தொழிலாளி பற்றிக் கவலைப்படுவதில்லை. இதனால் நாட்டின் சகல சிறுபான்மை இன மக்களும் ஓர் பொதுவான சிங்கள பௌத்த பேரினவாத தீவிரவாத ஒடுக்குமுறைக்குள் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவே ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற யாத்திரையில் சகல இன மக்களும் அதுவும் சிங்கள மக்கள் உட்பட தமது ஆதரவை வெளிப்படுத்துகின்றனர். இந்த யாத்திரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கோஷங்கள் சகல மக்களுக்கும் பொதுவானவை. மனித உரிமை மீறல்களைக் கண்டிப்பதாகவும். முஸ்லீம் மக்களின் ஜனசா எரிப்பிற்கு எதிரானவையாகவும், மலையக மக்களின் 1000ம் ரூபா சம்பளத்திற்கு ஆதரவாகவும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இதுவே சிவில் சமூகத்தின் சிறப்பான அடையாளமாகும்.   

கிழக்கு மாகாணத்திலிருந்து எழுந்துள்ள இம் மாற்றங்கள் குறித்து அரசியல்வாதிகள் மத்தியில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஒரு புறத்தில் இந்த ஆர்ப்பாட்டங்கள் யாவும் ஜெனிவா பிரச்சனையின் பின்னணியில் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடத்தும் நாடகம் எனச் சிலரும், சிவில் சமூகம் என்ற பெயரில் அரசியல் கட்சிகளின் நாடகம் என இன்னும் சிலரும், இந்த யாத்திரையின் பின்னர் மீண்டும் இவை படுத்துவிடும் என ஆருடம் கூறுபவர்களும் காணப்படுகின்றனர்.  

ஆனால் இத்தனை சந்தேகங்களுக்கு மத்தியிலும் சில உண்மைகள் புலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த யாத்திரை தொடர்பாக பல சிவில் சமூக உறுப்பினர்கள் மேல் தடையுத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இவர்கள் எவரும் பிரதான கட்சிகளைச் சார்ந்தவர்கள் அல்ல. தடையுத்தரவுகளை அசட்டை செய்து யாத்திரை இன்னமும் தொடர்கிறது. நீதிமன்ற தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதும், போராட்டத்தைக் கைவிட்டு வீட்டிற்குச் சென்று தூங்கிய அரசியல்வாதிகள் பலர். ஆனால் இந்த யாத்திரை மிகவும் வீரியமாகத் தொடர்கிறது எனில் மக்களின் பலத்தை நாம் சமான்யமானதாக கணக்கிட முடியாது. இந்த மக்களே தமிழர் தேசியக் கூட்டமைப்பின் கோட்டைகளை உடைத்து தமது அபிவிருத்தி தேவைகளுக்காக சந்திரகாந்தன், வியாழேந்திரன், டக்ளஸ் தேவானந்தா போன்ற அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுத்தார்கள். தற்போது மக்களின் அடிப்படை நலன்கள் பறிக்கப்படும் வேளையில் அவர்கள் எங்கே? என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகின்றன. அரசாங்கத்தை ஆதரிப்பது என்பது மக்களின் நலன்களைப் பாதுகாக்கவா? அல்லது மக்களுக்கு எதிரான தீர்மானங்களையும் ஆதரித்து மக்களை அடமானம் வைப்பதற்கா? சிவில் சமூகம் என்பது நாம் எதிர்பார்க்கும் அளவில் ஒழுங்கமைக்கப்படாவிடினும், மிகவும் திட்டமிட்ட வகையில் பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் யாத்திரையை ஆரம்பித்திருப்பது, அதுவும் கிழக்கிலிருந்து வடக்கு நோக்கித் திரும்பியிருப்பது புதிய சிந்தனையைத் தரவில்லையா? அரசை ஆதரிப்பது என்பது சரணாகதி அரசியலா? அல்லது நிபந்தனையின் அடிப்படையிலானதா? அல்லது பதவிகளைப் பாதுகாப்பதா? தற்போதைய சிவில் சமூக நடவடிக்கைகளைக் கேள்விக்குட்படுத்துவதற்குப் பதிலாக அவ்வாறான இப் புதிய போக்கை நாமும் இணைந்து பலப்படுத்துவதே பொருத்தமான அணுகுமுறையாகும். இவற்றில் இணைந்தே இவற்றிற்கான பதிலை நோக்கி நாம் செல்ல முடியும்.   

‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ என்ற யாத்திரை பல சந்தேகங்களுக்கு விடையளிக்கும் என எதிர்பார்க்கிறோம். கிழக்கு மாகாணத்தின் வீரியமிக்க சிவில் சமூகத்தின் இந்த ஏற்பாடுகள் புதிய சக்தியை மக்களுக்கு வழங்க வேண்டும். வெறுமனே அரசியல்வாதிகளின் கைப்பொம்மைகள் என்ற விளக்கங்களுக்கு அப்பால் அர்த்தமுள்ள விதத்தில் தொடர் நடவடிக்கைகள் அமைதல் வேண்டும். பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையான மக்கள் ஒரே நேரத்தில் தமது எதிர்ப்புகளை வெளிப்படுத்தும் விதத்தில் ஓர் குறிப்பிட்ட தினத்தில் கறுப்புக் கொடிகளை தமது காணிகளில் ஏற்ற வேண்டும். இவ்வாறான எதிர்ப்பு முயற்சிகள் ஓர் குறிப்பிட்ட பரந்த சிவில் சமூக ஏற்பாட்டின் அடிப்படையில் மட்டுமே செயற்படுத்தப்பட வேண்டும். அரசியல் கட்சிகளின் இவ்வாறான முயற்சிகள் தடுக்கப்பட்டு தனியே சிவில் சமூக அறைகூவலுக்கு மட்டுமே மதிப்பளிக்கப்பட வேண்டும். கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக மக்கள் வாழ்வில் துன்பங்களை ஏற்படுத்திய அரசியல் கட்சிகள் சாமான்ய மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்க அனுமதிக்கக் கூடாது. சிவில் சமூகம் இப் பிரச்சனையில் அரசியல் கட்சிகளின் மேல் மிகவும் கனதியான அழுத்தங்களைப் போட வேண்டும்.  

இன்றைய அரசு கட்சிகளை உடைத்து பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஜனநாயக அரசியலைக் கேலி செய்யும் வகையில் நடந்து கொள்கிறது. இது சிவில் சமூகத்தின் ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதாகும். இந்த யாத்திரை சிவில் சமூகத்தின் மத்தியில் புதிய புரிதலை ஏற்படுத்த உதவும் என எதிர்பார்க்கிறோம். அரசியல்வாதிகள் வெறுமனே ஊடகங்களிலும், பாராளுமன்ற உரைகளிலும் தமது கடமைகளை முடித்துக் கொள்கிறார்கள். இவ்வாறான யாத்திரைகள் மக்களுடன் சார்ந்துள்ள அரசியல்வாதிகளை தெருவிற்கு இழுத்து வந்திருக்கிறது. மக்களோடு மக்களாகச் செயற்படும் அரசியல்வாதிகளை இனம் காண்பதற்கு இவ்வாறன சமூக அசைவுகள் மிக முக்கியமானவை. அத்துடன் தென்னிலங்கையிலுள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் தற்போதுள்ள சிங்கள பௌத்த பெருந்தேசிய இனமைய வாதத்திற்குள் சிக்கி இக் கொடுமையான அரசை எதிர்க்க முடியாமல் தமிழ் மக்களின் போராட்டங்களின் போக்கினை அவதானித்து வருகிறார்கள். ஜெனீவா பிரச்சனைகளிலும், கொழும்பு கிழக்குத் துறைமுறைமுக பிரச்சனைகளிலும் மற்றும் பல பிரச்சனைகளிலும் அரசுக்குப் பலமான அழுத்தங்கள் ஏற்படுவதை எதிர்பார்கிறார்கள். உள்ளுரிலும், உலக அளவிலும் தமிழ் மக்கள் நடத்தும் இப் போராட்டங்களே நாட்டின் ஜனநாயக குரலுக்கு பலமளிப்பதாக மாறும்.  

ஒரு புறத்தில் நாட்டின் ஒரு சாரார் தமக்குச் சுதந்திரம் கிடைத்ததாக எண்ணிக் கொண்டாடும் வேளையில், இன்னொரு சாரார் தமது சுதந்திரம் மறுக்கப்பட்டுள்ளது என்பதை உணர்த்தும் வகையில் பல்வேறு தடைகள், அச்சுறுத்தல்கள் மத்தியில் எழுச்சியுடன் ‘பொத்துவில் முதல் பொலிகண்டி வரை’ யாத்திரையை ஆரம்பித்திருப்பது மிக வரவேற்கத்தக்கது. வழி இரு மருங்கிலும் மக்கள் இந்த யாத்திரைக்கு ஆதரவு வழங்குவதோடு புதிய அரசியல் செல்நெறிக்கான அத்தியாயத்தைத் திறக்க வழி சமைக்கும் என எதிர்பார்க்கிறோம். தேர்தல் காலங்களில் போட்டியிட முண்டியடிக்கும் போலித் தேச பக்தர்களை இவ்வாறான மக்கள் இயக்கங்கள் அடையாளப்படுத்த உதவும்.